வவுனியா பாட்டுக்கச்சேரியை ரத்து செய்த மாணிக்க விநாயகம்.
வவுனியா கோவில் கச்சேரியில் பாடுவதற்காக இலங்கை செல்லவிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்டோர் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
இலங்கையில் நடக்கும் கச்சேரியில் பங்கு கொள்ள தமிழ் பாடகர்கள் ஒப்புக்கொள்வதும், மயான பூமியில் உங்களுக்கென்ன கச்சேரி வேண்டிக் கிடக்கு என ஏதாவது சங்கமோ கழகமோ எதிர்ப்பு தெரிவித்ததும், தமிழ் உணர்வுக்கு மதிப்பு தந்து பயணத்தை ரத்து செய்வதும் கடந்தசில வருடங்களாக நடந்து வருகிறது. இலங்கைக்குப்போனால் எதிர்ப்பு வரும் என்பது தெரிந்தும் இவர்கள் ஏன் பாடுவதற்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்பதும், எதிர்ப்பு வந்ததும் தமிழ் உணர்வுக்கு மதிப்பு தந்து பின்வாங்குவது ஏன் என்பதும் யாராவது PhD க்கு ஆராய்ந்து பட்டம் வாங்க வேண்டிய சமாச்சாரம் இல்லை. லேட்டஸ்டாக வவுனியாவிலுள்ள இந்துக் கோயிலில் கச்சேரி நடந்த மாணிக்க விநாயகம், எஸ்.பி.பி. போன்றோர் செல்வதாக இருந்தனர். இதனை அறிந்த பெரியார் திராவிட கழகத்தினர் மாணிக்க விநாயகத்தின் வீட்டை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். முற்றுகைக்கும் போராட்டத்துக்கும் நடுவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று மாணிக்க விநாயகமும் மற்ற பாடகர்களும் கச்சேரியில் பாடுவதில்லை என முடிவு செய்து இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளனர். தமிழுணர்வு இருப்பதாக காட்டுவதற்கு எதுவுமே செய்யாமல் இப்படியான சந்தர்ப்பங்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு தமிழகத்தில் ஒரு தனி விருது வழங்கும் நிகழ்வே நடத்தலாம். அதையும் இலங்கையிலேயே நிகழ்த்த சொல்லுவார்கள் இந்த பாடகர்கள். அடுத்து இந்தக்கண்ணாமூச்சி அரங்கேறப்போவது எப்போதோ?