வவுனியாவில் இராணுவத் தலைமையகம் அமைக்க தமிழர்களின் 20 ஏக்கர் காணி அபகரிப்பு!
வவுனியாவில் தமிழ் மக்களின் 20 ஏக்கர் நிலம் இராணுவ தலைமையகம் அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அறிவித்தலை வவுனியா, மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் விடுத்துள்ளார்.
வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களின் 20 ஏக்கர் காணியே 56 வது இராணுவப் படைப்பிரிவின் தலைமையக அமைவிற்காக சுவீகரிப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நிமிர்த்தம் வவுனியா பிரதேச செயலகப் பிரிவின் நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பேயாடிகுழாங்குளம் கிராம வடபகுதியான கொக்குவெளி நிலம், கிழக்குப் பகுதியான பேயாடிக்குளம் அணைக்கட்டு, தெற்குப் பகுதியான இராமசாமி இராமச்சந்திரன் நிலம், மற்றும் மேற்குப் பகுதியான ஏ9 பிரதான வீதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 20 ஏக்கர் நிலமே அபகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக் காணிகளின் உரிமை கோருவோர் என நடராஜா, கேதீஸ்வரன், ஆர். நாகேஸ்வரன், எம். அமிர்தநாயகி, சண்முகநாதன், உமாபதி, எஸ். சிறிஸ்கந்தராசா, என்.சிறிஸ்கந்தராசா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.