வட- கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்! எம்.எம்.ரதன்
கொடூரமான போரினால் வட- கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் சிதைக்கப்பட்ட பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
கடந்த முப்பது வருடகால யுத்தில் நாமும் எமது இனமும் கல்வி என்ற சொத்தை தவிர ஏனைய விடயங்களில் மிகவும் பின்தங்கிய நிலைக்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளோம். அதில் பொருளாதாரமும் உள்ளடங்கும்.
வவுனியா நகரசபையினால் 25 லட்சம் ரூபா பெறுமதிiயில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி முன்பாக அமைக்கப்பட்ட அங்காடி வியாபார நிலையத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து தலைமையுரை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் சகல மாவட்டங்களிலும் வீதியோர வியாபாரிகளால் அந்த மாநகரமோ, நகரமோ மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றன. விபத்துக்கள் எற்ப்பட்டன. கலாச்சார சீரழிவுகள் ஏற்பட்டன.
மேலும் சமூகத்தை பாதிக்கும் பல உண்மைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு எமது மாவட்டமும் விதிவிலக்கல்ல. இதனை கருத்தில் கொண்டுதான் தை மாதம் நகர சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வவுனியாவில் இருந்து நடைபாதை வியாபாரிகளை நாம் அகற்ற தீர்மானித்தோம்.
இதன் பிரகாரம் எமது சபையின் சுகாதார பரிசோதகர், வருமானவரி உத்தியோகத்தோர், செயலாளர், பொலிஸார்,ஆகியோரின் ஒத்துழைப்புக்கள். மிகவும் உறுதுணையாக இருந்தது. இதன் ஊடாக கடந்த பங்குனி மாத இறுதியில் வவுனியா நகரில் இருந்து அனைத்து நடைபாதை வியாபாரிகளையும் பூரணமாக அப்புறப்படுத்தினோம்.
அவர்களுக்கு குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் சொந்தமாக வசிக்கும் நடைபாதை வியாபரிகளுக்கு நாம் விசேடமாக இவ்விடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளோம். அதற்காகவே அங்காடி வியாபார நிலயமாக இது செயற்படும்.
எமது நகரசபையானது பல்வேறுபட்ட இடர்களுக்கு மத்தியில் தான் இயங்க வேண்டிய தேவை இருக்கிறது. அரசாங்கத்தினால் எதுவிதமான நிதிகளும் வழங்கப்படுவதில்லை மக்களின் வரிப்பணத்தை கொண்டு நாம் எமது அபிவிருத்தியினை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
வட–கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் பொருளாதாரத்திலும் நாம் பலமடையவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் சுயமுயற்சிகளை நன்கு பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும். வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் தமது முதலீடுகளை எமது தாயகத்தில் இடவேண்டும்.
இதே போன்று புலம்பெயர்ந்த உறவுகளும் தம்மாலான உதவிகளை எமது தேசத்திற்கு வழங்கி எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முன்வரவேண்டும். குறிப்பாக தமிழர்களின் தாயகத்தின் பொருளாதாரத்தின் வளம் சிதைக்கப்பட்டுள்ளது.
தென் இலங்கைக்கு 80 வீத அபிவிருத்தி என்றால் வட-கிழக்கு இணைந்த தமிழர்கள் பகுதியில் 20 வீத அபிவிருத்திதான் மேற்கொள்ளப்படுகின்றது. இதுதான் மகிந்த சிந்தனையாம்.
உலக வங்கிகள் இன்னும் பல தாபனங்கள் பல நாடுகள் வழங்கும் நிதிகள் கூட எமக்கு உரிய முறையில் வந்தடைவதில்லை பாரிய கைத்தொழில் சாலைகள் இயங்கமுடியாது இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம், ஓட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை என குறிப்படலாம்.
முள்ளிவாய்க்காலில் எமது இனத்தின் கோடிக்கணக்கான பெறுமதியான வாகனங்கள், அனாதரவாக காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு எமது இனம் மொழி பண்பாடு, கலை, கல்வி, என்பவற்றோடு பொருளாதார வளத்தையும் கட்டியெழுப்ப நாம் அனைவரும் இதயசுத்தியுடன் செயற்படவேண்டும் என ரதன் மேலும் தெரிவித்தார்.
By:-yasikanth