வவுனியாவிலிருந்து கண்டிக்கு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
கண்டி பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டனுக்குச் செல்வதற்காக நள்ளிரவில் காத்திருந்த பயணி ஒருவரை ஆட்டோ ஒன்றில் அழைத்துச் சென்ற முடிச்சுமாறி ஒருவர் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, மயக்கி, உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு அவரை வட்டவளைப் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
வீதியோரத்தில் மயங்கிக் கிடந்த இவரை பொலிஸார் மீட்டெடுத்து, வட்டவளை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டார்.
திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்குச் செல்லும் பேருந்து ஒன்றில் வவுனியாவில் வைத்து ஏறி பயணம் செய்த வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்த கதி நேர்ந்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வந்துள்ளதாவது:
வவுனியாவில் இருந்து தலவாக்கலைக்கு திருமண வைபவம் ஒன்றிற்காக புறப்பட்டுச் சென்ற இந்த குடும்பஸ்தர், வவுனியாவில் வைத்து நள்ளிரவுக்கு முன்னதாக கண்டி நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில் ஏறி கண்டியைச் சென்றடைந்துள்ளார்.
கண்டியில் இருந்து ஹட்டனுக்குச் செல்வதற்காக சாமவேளையில் பேருந்துக்காகக் காத்திருந்த இவரைக் கண்ட முடிச்சுமாறி ஒருவர் தானும் அவசரமாக ஹட்டனுக்குச் செல்ல வேண்டியிருப்பதனால் இருவரும் ஆட்டோ ஒன்றில் பிரயாணக் காசைப் பகிர்ந்து செல்லலாம் ௭னக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
வழியில் கினிகத்தேனையில் ஓட்டோவை நிறுத்தி தேநீர் அருந்த வருமாறு அழைத்தபோது குடும்பஸ்தரான பயணி மறுத்து ஆட்டோவில் இருந்து இறங்காமல் இருந்தபோது, கடையில் இருந்து முடிச்சுமாறியினால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட தேநீரை அருந்தியதும் அவர் மயங்கிவிட்டார்.
மயக்கமடைந்திருந்தவரிடம் இருந்து மூவாயிரம் ரூபா ரொக்கப்பணம், அவருடைய தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களையும், கைத்தொலைபேசி, அவர் தனது உறவினர்களுக்காக கொண்டு சென்ற பத்தாயிரம் ரூபா பெறுமதியான உடு புடைவைகள் ௭ன்பவற்றையும் கொள்ளையடித்த அந்த முடிச்சுமாறியும், ஆட்டோ சாரதியும் பாதிக்கப்பட்டவரை வட்டவளை பகுதியில் மயங்கிய நிலையில் வீதியோரத்தில் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
வீதியோரத்தில் மயங்கிக் கிடந்த அவரை பொலிஸார் மீட்டு வட்டவளை வைத்தியசாலையில் சனிக்கிழமை காலையில் சேர்த்திருந்தனர். மயக்கம் தீராதிருந்த இவரை வட்டவளை வைத்திய அதிகாரிகள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கும் நீண்டநேரம் மயங்கிக்கிடந்த அவர் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மயக்கம் தெளிந்து ௭ழுந்து, நிலைமையை உணர்ந்து உடனடியாக வவுனியாவில் உள்ள தமது குடும்பத்தினருக்கு அருகில் இருந்த ஒருவர் மூலமாக தகவல் தெரிவித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு வவுனியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றவரிடம் இருந்து சனிக்கிழமை மாலை வரையில் தகவல் ௭துவும் கிடைக்காததனால் கவலையடைந்த குடும்பத்தினர் இவர் காணாமல் போயிருப்பதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதேவேளை, தலவாக்கலையில் உள்ள உறவினர்களும் இவர் காணாமல் போயிருப்பது தொடர்பாக நடமாடும் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.
பொலிஸாரும் வட்டவளையில் ஒருவர் மயங்கிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்களாகக் காணாமல் போயிருந்தவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.