போருக்குப் பின்னரான இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்: வவுனியாவில் பெண்கள் பேரணி!

போருக்குப் பின்னரான இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதனால், தமக்கு உரிய பாதுகாப்பளிக்கப்பட வேண்டும், இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் மூலம் தண்டித்து வன்முறைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்திய பெண்கள் கோரியிருக்கின்றார்கள். இதேவேளை, வலது குறைந்த, கண்பார்வையற்ற, செவிப்புலனற்ற, வாய் பேச முடியாத பெண்கள் அரச அலுவலகங்களில் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் உட்கட்டமைப்பு வசதிகளையும், ஆளணி வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று சமூக சேவை அமைச்சிடம் அவர்கள் கோரிக்கையும் விடுத்திருக்கின்றார்கள்.
அரச செயலகங்களுக்குச் செல்கின்ற வாய் பேச முடியாதவர்களுக்கும் செவிப்புலனற்றவர்களுக்கும் சேவைகள் வழங்கத்தக்க வகையில் சைகை மொழி பயின்ற அதிகாரிகள் இல்லாதிருப்பதனால், தமக்குரிய அரச சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களையும் கஸ்டங்களையும தாங்கள் எதிர் நோக்கியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இது தொடர்பில் வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட்டி செயலமர்வொன்றை நடத்தி, பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றை கோரிக்கை வடிவில் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கையளித்திருக்கின்றது. இது விடயத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முடிந்த அளவில் நடவடிக்கைகளை எடுப்பதாக திருமதி இமெல்டா சுகுமார் உறுதியளித்திருக்கின்றார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.