வவுனியாவில் தடுத்து நிறுததப்பட்டோர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்
காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள், கணவன்மாரை விடுதலை செய்யக் கோரியும், ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்ப்பதற்குமாக நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பு செல்ல முயன்றபோது, வவுனியாவில் வைத்து செவ்வாய் இரவு தடுத்து வைக்கப்பட்ட வடபகுதி மக்கள் வவுனியாவில் அமைதிப் பேரணி நடத்தி, ஏ 9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து வவுனியா அரசாங்க அதிகாரிகளிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
பதினொரு பஸ் வண்டிகளில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சுமார் 700 பேரைச் செல்லவிடாமல், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வவுனியா பொலிசார் செவ்வாய்க்கிழமை இரவு தடுத்து நிறுத்தினர். பஸ் வண்டிகளில் ஏறி புறப்படுவதற்கு ஆயத்தமாகிய அந்த மக்களை வவுனியா நகரசபைப் பகுதியில் வைத்து பொலிசார் வீதிகளின் முக்கிய சந்திகளில் தமது ட்ரக் வண்டிகளை வீதிக்குக் குறுக்காக நிறுத்தி தடை செய்தனர். சில பஸ் வண்டிகளின் டயர்களுக்கு முன்னால் கூரிய ஆணிகள் அடிக்கப்பட்ட பலகைகளைக் களவாக வைத்து பஸ் வண்டிகள் புறப்பட முடியாதவாறு தடுத்திருந்தனர். அத்துடன் பஸ் வண்டிகளின் சாரதிகள், நடத்துனர்களை மிரட்டி அச்சுறுத்தி மக்களை ஏற்றிச்செல்லாதவாறு தடையேற்படுத்தியிருந்தனர்.
இதனால் ஆத்திரமுற்ற மக்கள் பொலிசாருக்கு எதிராக வெகுண்டெழுந்து கூச்சலிட்டு கூக்குரல் எழுப்பினர் சிலர் தமது பிரயாணத்தைத் தடை செய்த பொலிசாருக்கு சாபமிட்டு அழுது அரற்றினர். சிலர் தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மெழுகு திரிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர். நள்ளிரவு வரையிலும் சிலர் அழுது அரற்றி கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டமைக்காகத் துயருற்றிருந்தனர். இவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோரும் நகரசபையிலேயே இரவைக் கழித்தனர். அவர்களுடன் இந்தப் பயண ஏற்பாட்டாளர்களும் தங்கியிருந்தனர்.
இந்த மக்கள் கொழும்பு செல்வது பாதுகாப்பற்றது என்றும், அது குறித்து தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், வவுனியா எல்லைக்கு அப்பால் அவர்களுக்குத் தம்மால் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும், எனவே அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதனால் இரவில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் புதன்கிழமை காலையில் பயணத்தை மேற்கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
ஆயினும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பஸ் வண்டிகளின் சாரதிகளை தொலைபேசி மூலமாகவும் தனித்தனியாகவும் நேரடியாகத் தொடர்பு கொண்ட பொலிசார் அங்கிருந்து பஸ் வண்டிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் திரும்பி வரக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அவர்களது வழிப்பாதை அனுமதி ரத்துச் செய்யப்படும் என்று பல வழிகளில் அவர்களை அச்சுறுத்தி பஸ் வண்டிகளை வவுனியா நகரசபை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியிருந்தனர்.
இதனால், இரவு முழுவதும் வவுனியா நகரசபை பகுதியில் தங்கியிருந்த மக்கள் பொலிசார் ஏற்கனவே உறுதியளித்திருந்தவாறு, அதிகாலையில் கொழும்பு நோக்கிப் புறப்படுவதற்கு எந்தவிதமான வாகனங்களும் இன்றி தடுக்கப்பட்டிருந்தனர். காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள் கொழும்பு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த காணாமல் வடக்கு கிழக்கு காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கங்களின் ஒன்றியத்தினர் வவுனியா நகரசபைப் பகுதியில் இரவு தங்குவதற்கு அனைவருக்கும் வசதியில்லாத காரணத்தினால் சிலரை இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகளை ஓமந்தை சோதனைச்சாவடியில் தாமதப்படுத்திய படையினர், அவற்றை ஒவ்வொன்றாக தாமதித்துச் செல்லும் வகையில் அனுப்பி வைத்தனர். இந்த பஸ் வண்டிகள் வவுனியா நகர சபை அமைந்துள்ள ஏ9 வீதிவழியாகப் பிரயாணம் செய்யவிடாமல் தடுத்து மாற்று வழியின் ஊடாக அனுப்பி வைத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை காலையிலும் கொழும்பு செல்வதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் நகரசபை மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது. மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்திரு ஜெபமால அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோர் பொலிசாரின் நடவடிக்கையைக் கண்டித்து உரையாற்றினர் அத்துடன் காணாமல் போனவர்களின் கோரிக்கைகள் நான்கு வருடங்களுக்கு மேலாக அரசினால் உதாசீனம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இந்தப் பிரச்சி;னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதேநேரம் ஜனநாயக ரீதியில் மக்கள் போராட்டம் நடத்துவதைத் தடுத்து நிறுத்தியிருந்த அரசின் நடவடிக்கை குறித்து ஐநாமனித உரிமைகள் பேரவைக்கு எட்டச் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக முக்கியஸ்தர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உரையாற்றினர்.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டிருந்த பஸ் வண்டிகளை ஓமந்தை சோதனைச்சாவடியில் தாமதப்படுத்திய படையினர், அவற்றை ஒவ்வொன்றாக தாமதித்துச் செல்லும் வகையில் அனுப்பி வைத்தனர். இந்த பஸ் வண்டிகள் வவுனியா நகர சபை அமைந்துள்ள ஏ9 வீதிவழியாகப் பிரயாணம் செய்யவிடாமல் தடுத்து மாற்று வழியின் ஊடாக அனுப்பி வைத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை காலையிலும் கொழும்பு செல்வதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் நகரசபை மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது. மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்திரு ஜெபமால அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சரவணபவன் ஆகியோர் பொலிசாரின் நடவடிக்கையைக் கண்டித்து உரையாற்றினர் அத்துடன் காணாமல் போனவர்களின் கோரிக்கைகள் நான்கு வருடங்களுக்கு மேலாக அரசினால் உதாசீனம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இந்தப் பிரச்சி;னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதேநேரம் ஜனநாயக ரீதியில் மக்கள் போராட்டம் நடத்துவதைத் தடுத்து நிறுத்தியிருந்த அரசின் நடவடிக்கை குறித்து ஐநாமனித உரிமைகள் பேரவைக்கு எட்டச் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக முக்கியஸ்தர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உரையாற்றினர்.
பேரணி
இதனையடுத்து பொலிசாரின் அனுமதியுடன் வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஏ9 வீதிவழியாக வவுனியா செயலகம் வரையில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி நீதிமன்ற வளாகத்தைக் கடந்ததும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கச்சேரி வாயிலைச் சென்றடைந்து வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. கச்சேரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்களைச் செல்லவிடாமல் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜரை அரசாங்க அதிபர் செலயக முன்வாயிலில் வந்து பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கோரினர். எனினும் அரசாங்க அதிபர் தமது ஆசனத்தில் இருந்து வெளியில் வரமுடியாது என்றும் பிரதிநிதிகள் ஐந்து பேர் மகஜரைக் கொண்டு வந்து தந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் கச்சேரிக்கு எதிரில் ஏ9 வீதியில் அமர்ந்து போக்குவரத்தக்களைத் தடைசெய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் வெளியில் வந்து மகஜரைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பலத்த கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கச்சேரியின் முன் வாயிலில் காவலுக்கு நின்றிருந்த பொலிசாரும் சிறிது நேரத்தின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மகஜர்
இதனையடுத்து மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்திரு ஜெபமாலை அடிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் சமாதான நீதவான் லெம்பட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வவனியா அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்து மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறி அரச அதிபர் வந்து மகஜரைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதைடுத்து மேலதிக அரசாங்க அதிபர் செயலக முன்வாயிலில் வந்து முக்கியஸ்தர்களிடம் இருந்து பொதுமக்களின் முன்னிலையில், வாயில் கதவு அரைவாசி திறக்கப்பட்ட நிலையில் மகஜரைப் பெற்றுக்கொண்டார். இந்த மகஜர் உரியவர்களுக்கு உடன் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் சார்பில் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
மகஜர் கையளிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் காணாமல் போனவர்களைத் தேடும் அமைப்பின் தலைவர் பிரிட்டோ உரையாற்றினார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் அசமந்தப் போக்கைக் காட்டி வருகின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்த அவர் செவ்வாய்க்கிழமை சம்பவம் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐநாவின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு கிட்டும் வரையில் வடக்கு மக்களுடன் தென்பகுதி மக்களும் இணைந்து போராட்டத்தில் ஒத்துழைப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு இந்த மக்களைக் கொழும்புக்குச் செல்லவிடாமல் பல்வேறு மறைமுக வழிகளில் முட்டுக்கட்டைகளைப் போட்டு மக்களின் சீற்றத்தையும் வெறுப்பையும் சம்பாதித்திருந்த பொலிசார் புதன்கிழமை காலை அவர்கள் பேரணி நடத்துவதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தனர். அத்துடன் அந்த மக்கள் கடும் சீற்றம் கொண்டு கோஷங்களை எழுப்பி ஆக்ரோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அமைதி காத்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.