இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைவிடப்பட்ட பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தினருடைய வாகனங்கள் உரிமை கோரும் நோக்கில் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உரியவர்கள் விரைவில் உரிமைகோருங்கள் என அரச அதிபர் கேட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள கைவிடப்பட்ட வாகனங்களினால் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கு உரியவர்கள் ஆவணங்களை வழங்கி தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரா தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனங்களில் நீர்தேங்கி நுளம்பு பெருகும் நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைவிடப்பட்ட பொதுமக்களுடைய வாகனங்கள் உரிமை கோரும் நோக்கில் வவுனியா மாவட்ட செயலகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதன்படி பலர் உரிய ஆவணங்களைக் கொண்டு தமது வாகனங்களை மீளப்பெற்ருள்ளனர். எனினும் அவற்றில் பல இதுவரை உரிமை கோரப்படவில்லை.
அதன்படி ரயர், பெற்றோஸ் ராங் என பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நுளம்பு பெருகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவற்றில் உள்ள நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் பணித்துள்ளார். அத்துடன் சுகாதார அதிகாரிகளும் பார்வையிட்டதுடன் நீரினை அகற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட போது,
இந்த வாகனங்கள் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட செயலகத்திலே உள்ளது. எனவே உரியவர்கள் தங்களுடைய வாகனங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.