யாழில் தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு பத்திரிகைகளை எடுத்துச்சென்ற யாழ்.தினக்குரல் பத்திரிகையின் விநியோகஸ்தர் இன்று வியாழக்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.தினக்குரல் பத்திரிகைகளை பருத்தித்துறைக்கு விநியோகிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஊழியர் மீது புத்தூர் சந்திக்கு அண்மையாக வைத்து இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீதியோரமாகக் கிடந்த மேற்படி ஊழியரை அவ் வீதியால் சென்ற பொதுமக்கள் காப்பாற்றியதுடன் வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட உதயன் பத்திரிகை விநியோகஸ்தரும் மேற்படி இனம் தெரியாதவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அவ்வூழியர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை மூலம் தாக்குதலில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இது என்பதும் குறிப்பி;டத்தக்கதாகும். இறுதியாக உதயன் பத்திரிகை வடமராட்சி குங்கர் கடையடிப்பகுதியில் வைத்து தீயிடப்பட்டதுடன் அதன் ஊழியரும் தாக்கப்பட்டு மோட்டார் சைக்கிளும் தீயிடப்பட்டமை யாவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவன ஊழியர்கள் மீது பல தாக்குதல் சம்பவங்கள் இதுவரை இடம்பெற்றுள்ள போதிலும் எவரையும் பொலிசார் இதுவரை கைது செய்யவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.