செட்டிக்குளத்தில் முஸ்லீம்களுக்கே இந்திய வீட்டுத்திட்டம்- தமிழர்கள் புறக்கணிப்பு
செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் வீட்டு திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அமைச்சர் றிசாத் பதியுதீனின் சிபார்சில் போரினால் பாதிக்கப்படாத முஸ்லீம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் உதவியுடனான 1ம் 2ம் கட்டக் கிராம பயனாளிகள் தெரிவில் முஸ்லிம் குடும்பங்கள் பெருமளவு எண்ணிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதிலும் அங்கு இடம் பெயராத குடும்பங்கள் நிரந்தரமாக வெளிமாவட்டங்களில் வசித்து வரும் குடும்பங்கள் ஏற்கனவே கல்வீடுகளை கொண்டுள்ள குடும்பங்கள் என்ற வகையில் தகுதியற்ற பயனாளிகளிற்கு வீடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் முழுமையாகப் பாதிக்கப்பட்டு மீளக் குடியமர்ந்த மக்களைக் கொண்ட கிராமங்களைத் தெரிவு செய்யுமாறும் இன மத வேறுபாடின்றி பாரபடசம் காட்டாது செயற்படுமாறும் செட்டிக்குளம் பிரதேச மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் தனஞ்சநாதன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.