வவுனியாவில் டெங்கு தீவிரம்; நேற்று முன்தினம் சிறுமி சாவு
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் கடந்த சில நாள்களாக தீவிரம் பெற்றுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அபாய அறிவிப்பு விடுத்துள்ளது. இவ்வாறு டெங்கு நோயின் தீவிரம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் டெங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா தேக்காவத்தை ஆலடிப் பகுதியைச் சேர்ந்த செரீன் ஏஞ்சலின் டெக்ஸ்ரத்நைல்ட் (வயது3) என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையால் வவுனியா வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆயினும் அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து உடனடியாக மேலதிகச் சிகிச்சைக்காக அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆயினும் சிகிச்சை பயனின்றி அந்த 3 வயதுச் சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அண்மைக் காலமாக பெய்து வந்த மழையை அடுத்து ஏராளமான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது.
இவற்றில் இருந்து உற்பத்தியாகும் டெங்கு நுளம்புகளின் அதிகரிப்பே இவ்வாறு டெங்கு நோய் தீவிரமடை வதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கு வவுனியா நகரசபையினரும், வவுனியா சுகாதாரத் திணைக்களத்தினரும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு சாதகமான சூழ்நிலை காணப்படும் இடங்களை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
எனினும் இந்த முயற்சியில் பொது மக்களும் ஒத்துழைத்தால் மாத்திரமே பூரண அடைவை எய்த முடியும் என்று சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.