பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதான யாழ். இளைஞர் நிரபராதி என விடுதலை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு, அவர் நிரபராதி என இனங்காணப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றுப் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஜுன் செப்ரெம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து, போர் ஆயுதப் பயிற்சி பெற்று யாழ்.மணியம் தோட்டப் பகுதியில் வன்செயல்கள் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்ததாக இந்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அப்புத்துரை அகிலன் என்பவரே இவ்வாறு குற்றஞ் சாட்டப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர் ஆவார்.
அவரை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் சந்தேகநபருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அவர் தொடர்பான உண்மை விளம்பல் விசாரணையின் போது அவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கடந்த 18ம் திகதி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.
அவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லையென சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் வழக்கில் எதிரியான அகிலன் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதியென இனங்கண்டு நேற்று அவரை யாழ். மேல்நீதிமன்றம் விடுதலை செய்தது.
எதிரி சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் வாதாடியிருந்தார். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி செல்வி நளினி கந்தசாமி வாதாடியிருந்தார்.