தனியார் பஸ் சேவையைச் சேர்ந்த நால்வர் வவுனியா பொலிஸாரால் கைது


வவுனியாவில் தனியார் பஸ் நடத்துநர்கள் சாரதிகள் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பஸ் நடத்துநருக்கும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லத்தயாராக இருந்த தனியார் பஸ் நடத்துநருக்கும் இடையில் இன்று அதிகாலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கொழும்பில் இருந்து வந்த பஸ் நடத்துநர், தமது 5000 ரூபா பணத்தினையும் சிட்டைப் புத்தகத்தையும் வவுனியாவை சேர்ந்த பஸ் நடத்துநர் பறித்ததாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் வவுனியாவைச் சேர்ந்த பஸ் சாரதி , நடத்துநர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா தனியார் பஸ் சங்கத் தலைவர் இராஜேஸ்வரனைத் தொடர்பு கொண்ட போது,
கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த பஸ், வவுனியா பஸ் தரிப்பிடத்தில் யாழ் நோக்கி செல்வதற்கு தயாராக இருந்த பஸ்சுக்கு முன்னால் அதிகாலை 3.30க்கு நிறுத்தப்பட்டு, விதிமுறையை மீறி பயணிகளை ஏற்றியுள்ளனர்.இதனார் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதாகிய நால்வரும் வவுனியாவை சேர்ந்தவர்கள். அவர்கள் பணத்தையும் சிட்டைப் புத்தகத்தையும் பறிக்கவில்லை. கொழும்பிலிருந்து வந்தவர்கள் பொரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர், பொலிஸார் பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
உடனடியாக இவர்கள் விடுதலை செய்யப்படா விடின் தனியார் பஸ் சேவையினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் எனவும் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.