பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்து வங்கியில் பணம் வைப்பு செய்யக் கோரும் மோசடிக்காரர்
வவுனியாவில் பரவலாக நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்புக்களை மேற்கொண்டு பரிசு கிடைத்துள்ளதாகவும், வெளிநாட்டு வாய்ப்பு தமது நிறுவனத்தின் ஊடாக கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து வங்கியில் பணம் வைப்பிலிடுமாறு கூறும் மோசடிக்காரர்களால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறிப்பட்ட சிலரின் நிலையான தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளும் சிலர் பலதேசிய கம்பனிகளின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் இருந்து உரையாடுவதாகவும், தாம் தொடர்பினை மேற்கொண்ட தொலைபேசி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய போட்டியொன்றில் பரிசு கிடைத்துள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு போவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு முதற்கட்ட பணம் வைப்பிலிட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய சிலர் தமது தொலைபேசி சேவையாளர்கள் போட்டியை நடத்தியிருக்கலாம் என்ற நம்பிக்கையில் வங்கியில் பணத்தை வைப்பிலிட்ட நிலையிலும் சிலர் தமது தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்புகொண்ட தெளிவு பெற்ற நிலையும் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் வவுனியா ரெலிக்கொம் தொலைபேசி நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வியடமாக தம்மிடம் பலர் தொடர்பு கொண்டதாகவும் எனினும் தமது நிறுவனத்திற்கும் இவ்வாறான போட்டிகளுக்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்ததுடன் வாடிக்கையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரியுளளனர்.