வவுனியா வாக்காளர் இடாப்பில் இருந்து பலரை நீக்க நடவடிக்கை

வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களில், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இருந்து பலரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரு மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இறுதிக்கட்ட திருத்த வேலைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு வாக்காளர் கணக்கெடுப்பின் பிரகாரம் ஒரு இலட்சத்து 1092 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு 12 ஆயிரத்து 952 பேரை நீக்கவும் 7758 பேரை சேர்த்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 52 ஆயிரத்து 455 பேர் பதிவு செய்யப்பட்டடிருந்தனர். இவர்களில் 2012 ஆம் ஆண்டு இடாப்புக்கு 7406 பேரை நீக்கவும் 9090 பேரை சேர்த்துக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு நீக்கப்படுபவர்கள் வேறு இடங்களுக்கு சென்றவர்களாகவும் இவ்வாண்டுக்கான பதிவுகளை சமர்ப்பிக்காதவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் வாக்காளர்களாக பதிவு செய்யப்படாதவர்கள் தேர்தல்கள் அலுவலகத்தில் இலவசமாக பெறக்கூடிய படிவத்தினை நிரப்பி அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் இம் மாதம் 31 ஆம் திகதிக்கிடையில் ஒப்படைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.