அஞ்சலி செலுத்த தடைவிதிக்கும் அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமா?சிவசக்தி ஆனந்தன்

முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு மூன்றாவது ஆண்டாகவும் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்துகின்றோம்.

சிவப்பு வர்ணத்தில் துண்டுப்பிரசுரம் மூலமாகவும், வவுனியாவின் பலபாகங்களில் திடீர் வீதிச் சோதனைகளை ஏற்படுத்தியும் இன்னபிற யுக்திகளைக் கையாண்டும், எமது மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலத்துவதைத் தடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், எமது மக்கள் அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற இங்கு கூடியுள்ளனர்.

அமரத்துவம் எய்திய மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கிளை, அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார்.

By:-yasikanth

இந்நிகழ்வில், வீ.ஆனந்தசங்கரி, வினோநோகராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இங்கு ஏராளமான உளவுத்துறையினர் கூடியுள்ளீர்கள். நிழற்படம் மற்றும் காணொளிகளை எடுக்கின்றீர்கள். அஞ்சலி செலுத்திய தாய்மார்களும் சகோதரிகளும் கண்ணீர்விட்டு அழுவதையும் ஊடகத்துறையினரின் ஒளிப்பதிவுக் கருவிகள் அவர்களை நோக்கித் திரும்பியதை நீங்கள் பார்த்ததுடன் பதிவும் செய்திருக்கிறீர்கள்.

இதனை ஜனாதிபதியிடம் காண்பியுங்கள். இவ்வளவு சோகத்தைத் தேக்கி வைத்து அவர்கள் மனத்துக்குள் குமுறுவது அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். இனியாவது எமது மக்கள் அஞ்சலி செலத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று அவருக்கு விபரித்துச் சொல்லுங்கள்.

நாங்கள், எமது மக்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்குப் போவதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை. இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்திக்காகவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.

அவர்கள் தமது கவலை மற்றும் துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களது மனப்பாரத்தை இறக்கிவைத்து, ஒரு புதிய ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளோம்.

இந்நிகழ்வைத் தடுப்பதினூடாக நீங்கள் எங்களை மீண்டும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துகின்றீர்கள். எங்களது அஞ்சலியைக்கூடச் செலுத்தவிடாமல் தடுக்கும் நீங்கள் எப்படி எங்களது பிரச்சினையைத் தீர்க்கப்போகிறீர்கள்?

இன்று ஒரு முக்கியமான நாள். எமது நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க வெளியுறவு அமைசச்ர் கிலாரி கிளிண்டனை இன்றுதான் சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பையும் இந்தநாளையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் இதன் உட்பொருள் நன்கு விளங்கும்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் இன்று சர்வதேச சமூகம் எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எமது பிரச்சினை அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் முன்பைவிட மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன், எம்மை அடிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

இந்த அரசு காணி சுவீகரிப்பு, மீன்பிடிப்பதற்குத் தடைவிதித்தல், எமது பகுதிகளில் வலுக்கட்டாயமாக புத்தகோயில்களை நிறுவுதல், திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு எம்மை எமது பாரம்பரிய நிலப்பரப்பிலேயே சிறுபான்மையினராக்கும் நிகழ்ச்சிநிரலை மேற்கொண்டுள்ளது. இதற்கு வசதியாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றது.

இவற்றிற்கெதிராக நாம் ஜனநாயக ரீதியில் குரல்கொடுப்பதற்கு எமது அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது ஆன்மா சாந்தியடைய தீபமேற்றி வழிபட்டனர்.


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.