அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில், கூட்டமைப்பு நடாத்தும் உண்ணாவிரதப் போராட்டம்
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பலநூறுபேர் எந்தவித விசாரணையும் இல்லாமல் ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போயுமுள்ளர்.
இது தொடர்பாக நாம் பல்வேறுமுறைகள் பாராளுமன்றத்தினூடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். அரசியல் கைதிகள் பலமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயத்தில் அரசு சார்பாக அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கியும்கூட இதுவரை எதுவுமே நடக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் பலர் அங்கவீனமுற்றவர்களாகவும், பலபெண்கள் திருமணம் முடித்து குழந்தை உள்ளவர்களாகவும் சிறைகளில் வாடுகின்றனர். பல இளைஞர்கள் குடும்பப்பொறுப்பைச் சுமப்பவர்களாக உள்ளனர்.
இவர்களை எந்தவித விசாரணையும் இன்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பதனால் அவர்களது முழு வாழ்க்கையுமே அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் கைதிகளின் விடுதலைபற்றி இலங்கை அரசு சிந்திக்காமல் இருப்பதானது வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதாகும்.
தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரித்து நிற்கின்றது.
அவர்களுக்கு எமது ஆதரவினைத் தெரிவிக்கும் பொருட்டும், அவர்களது கோரிக்கைகளுக்குச் சர்வதேச ஆதரவினைத் திரட்டும்பொருட்டும், இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உடனடித் தீர்வை எட்டும்பொருட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதியன்று காலை 7மணியளவில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்துகின்றது.
இந்தப் போராட்டத்தில் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அனைத்து உள்ளூராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்களையும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் பெற்றோர், அவர்களின் உறவினர்களையும், காணாமல் போனவர்களின் பெற்றோர், அவர்களின் உறவினர்களையும், தடுப்பிலுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சகல அரசியல் கட்சிகளையும், அனைத்துப் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்திக் கொடுக்கும்படி வேண்டுகின்றோம்.
By:-yasikanth