கருணா, பிள்ளையான், கே.பி. போன்றோர் பதவிகளில்(புலிகளுக்கு உணவளித்தோர் சிறையில்.)

வவுனியா நகரசபை சபை மைதானத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நேற்று  நடத்தியது.

நூற்றுக்கணக்காண மக்கள் பங்குபற்றி இவ் அடையாள உண்ணாவிரதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிவசக்தி ஆனந்தன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சரவணபவன், புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தன்,  ஐ.தே.கட்சி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா, மற்றும் மனோகணேசன், ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்துக்கொண்டனர் 

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து இன்று கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

உண்ணாவிரதத்தில் பற்கேற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில், 

கருணா மற்றும் பிள்ளையான் மற்றும் கே.பி போன்றோர் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை பதவிகளையும் வகித்து வரும்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு போன்ற உதவிகளை செய்தவர்களை சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வியெழுப்பினார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் வழக்கு தாக்கல் செய்யாமல் அரசியல் கைதிகளை சிறை வைப்பதனை எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்றுக்கொள்ள முடியாதென மேலும் தெரிவித்தார்.

இங்கு ஊடகவியலாளர்களில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா,

"பல அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர். ஆனால் இந்த நபர்களுக்கு பூரணமாக செயற்பட அனுமதி அளித்த தலைமைத்துவம் வழங்கிய கருணா அம்மான், கேபி, பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக பாராளுமன்றில் உள்ளனர். அரச வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10, 15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளனர். இது எவ்வகையில் நியாயம் என நாம் கேட்கிறோம்.

இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கேபி, கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்.

இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் இனவாதத்தை தூண்டும் செயலாகும்" எனத் தெரிவித்திருந்தார்.

இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் கையில்,  கைது செய்யப்பட்ட தம் உறவுகள் புகைப்படங்களை தாங்கியவாறு அழுதபடி தென்பட்டனர்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.