உண்ணாவிரத கைதிகளை சந்திக்க த.தே.கூட்டமைப்பு நேரடி விஜயம் - கைதிகள் கோப்பி அருந்தினர்
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மகசின் சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவின் உறுதி மொழியை கருத்திற்கொண்டும் அரசிற்கான கால அவகாசமொன்றை வழங்குவதற்காகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.
உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர்களுக்கு கோப்பி வழங்கி கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராட்டத்தை முடிவுறுத்தியுள்ளனர்.
இதுபற்றி சுமந்திரன் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதியை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து, இன்று அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறியதை அடுத்தே இந்த உண்ணாவிரப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க நேற்று சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் எமக்கு பதில் அறிக்கை ஒன்றைக் கையளித்தார்.
இவ்வறிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவை எனவும், அக் காலப்பகுதிக்குள் இவர்களுக்குரிய வழக்குப் பதிவு, புனர்வாழ்வு மற்றும் விடுதலை தொடர்பில் உரிய தீர்வொன்றினை அரசாங்கம் வழங்கும் எனவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து என்னுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி மற்றும் சிறிதரன் ஆகியோர் இன்று கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து நிலமைகளை எடுத்துக் கூறினோம்.
அதனை ஏற்கமறுத்த அவர்கள் எவ்வாறு நீங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய வாக்குறுதிகளை நம்புகின்றீர்கள் என எங்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசாங்கம் கூறியதற்காக ஒரு கால அவகாசத்தைக் கொடுப்போம். அதற்காக நீங்கள் உண்ணாவிரதத்தை கைவிடத்தேவையில்லை. இந்த ஒரு மாத காலப்பகுதிக்கு உண்ணாவிரதத்தை இடைநிறுத்தி வையுங்கள். இக்குறித்த காலப் பகுதிக்குள் அரசாங்கத்தால் தீர்வு வழங்கப்படாது விடின், அதன் பின்னர் நாம் செய்ய வேண்டியது குறித்துத் தீர்மானிப்போம் என நாங்கள் தெரிவித்தோம்.
அதற்கு அவர்களும் இணங்கி தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை குறித்த காலப்பகுதிக்கு இடைநிறுத்தி வைப்பதாக அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இவர்களுக்குரிய தீர்வினை குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும். இதற்காக தொடர்ந்து பல கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்' என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வவுனியாவினில் கூட்டமைப்பின் மற்றொரு சாரார் முன்னெடுத்து வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கௌரவம் வழங்கும் வகையில் இன்று மாலை வரை தமது
உண்ணவிரதப் போராட்டத்தை தொடர்வதாகவும் பின்னர் முடிவுக்கு கொண்டுவருவதாகவும், தமிழ் அரசியல் கைதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
By:-yasi