வவுனியாவில் உண்ணாவிரதம் ஆரம்பம்! மக்களை அச்சுறுத்தும் வகையில் பெருமளவு பொலிஸார் குவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று  காலை திட்டமிட்டபடி 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நகரசபை மைதானப் பகுதியில் பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள போதிலும், பெருமளவு பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சித் தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதப் பகுதியில் காணப்படுகின்றார்கள்.

பெரும்பாலான தலைவர்கள் காலை 7.00 மணிக்கே உண்ணாவிரதப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சோ்க்கும் வகையிலேயே இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நகரசபை மைதானப் பகுதியில் பெருந்தொகையான பொலிஸார் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டிருந்தார்கள்.

நகரசபை வாயிலிலும் பொலிஸார் பாதுகாப்பக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

போராட்டத்துக்கு வரக் கூடிய பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள போதிலும், பெருந்தொகையான பொதுமக்களை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானபோதே காணக்கூடியதாக இருந்தது என தகவல்கள் தெரிவித்துள்ளன.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.