எப்போது வருவார் அப்பா? வவுனியா போராட்டத்தில், மகனின் கவலையை நினைத்து கண்ணீர் மல்கிய தாய்!

அப்பா எப்போது வருவார்? நான் அப்பாவை பார்க்கமுடியாதா?'' என கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த தாயிடம் கவலையுடன் கேட்டான் நான்கு வயது மகன். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இடம்பெற்றது.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு இளம் தாய் ஒருவர் தனது நான்கு வயது மகனுடன் வருகை தந்திருந்தார். காணாமற் போன தனது கணவரை விடுவிக்குமாறு அந்தத் தாய் கண்ணீர் மல்கியவாறு கோரிக்கை விடுத்தார். கணவரின் படத்தையும் அவர் கையில் தாங்கியிருந்தார்.

இலங்கையின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் அரசு விரைவில் உரிய பதிலளிக்கக் கோரியும் நேற்று வவுனியாவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

எமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்?, பல வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை மனமிரங்கி விடுவியுங்கள்." என்று சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள், இளந்தாய்மார்கள் அனைவரும் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தனர்.

காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களையும், சுலோகங்களையும் இவர்கள் தாங்கிநின்றனர். இந்தப் போராட்டத்திலாவது தமக்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்க வேண்டும் என அவர்கள் அங்கு வலியுறுத்திக் கோரினார்கள்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.