தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை நிறைவேற்ற இந்திய அரசின் தலையீடு அவசியம்: எம்.எம் ரதன்
இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கும் வவுனியா நகரசபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதுவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது நகரசபை உபதலைவர், தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளுராட்சி மன்றங்களில் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழினத்தினை பொறுத்தவரையில் 13ஆவது அரசியல் தீர்வு திட்டத்தின் அடிப்படையில் தமது உரிமைகளை ஏற்க தயாராகவில்லை. அதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை.
போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படுவது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிவாரணமே. இதற்கு வலுவான கட்டமைப்பு தேவை. இதற்காக வட- கிழக்கு இணைந்த தாயகத்தில் சமஷ்டிமுறையில் ஒரு சுயாட்சியினை வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் இன்றியமையாதது. எமது பிரச்சினையில் அக்கறை கொண்டு இந்திய செயற்படும் என தமிழ் பேசும் மக்கள் நம்புகின்றார்கள். ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் எடுத்த முடிவு தமிழ் பேசும் மக்களிற்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு விசேடமாக உள்ளுராட்சி மன்றங்கள், பிரதிநிதி என்ற அடிப்படையில் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதே போன்று தொடர்ந்தும் இந்த இலங்கை அரசிற்கு பல அழுத்தங்களை கொடுத்து எமது தீர்வில் இந்திய அரசு மிகவும் பக்கபலமாக இருக்கவேண்டும்.
இன்று வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இல்லை. இராணுவ தளபதியாக இருந்த போது எவ்வாறு சந்திரசிறி நடந்து கொண்டாரோ இன்றும் வெள்ளை சீருடையில் ஆளுநராக இருக்கும் போதும் அதனை செய்கின்றார்.
எமது இனத்தின் அரசாங்க அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் மௌனிக்க செய்துள்ளது. தொழில் ரீதியாக அவர்கள் அடக்கு முறையை சந்தித்தாலும் உணர்வு ரீதியாக மிகவும் உறுதியாக உள்ளார்கள். இவற்றுடன் வடக்கில் இராணுவ பிரச்சினை குறைக்கப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதற்கு இந்திய அரசாங்கம் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்க வேண்டும். கடந்த காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய தூதுக்குழுக்கள் குறிப்பாக வன்னிப்பகுதிக்கு விஜயம் செய்த போது வவுனியாவில் நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள் சந்தித்த போது எமது தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களே அல்லது நகராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கோ தெரியாது.
இவர்களின் வருகை வெறும் கண்துடைப்பு நாடகமா என எமது மக்கள் கருதினார்கள். இனிவரும் காலங்களில் இவ்வாறான குழுக்கள் வருகின்ற போத அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களில் மக்கள் நிலைப்பாடு தொடர்பாக அறிவதற்கு உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளை அழைத்து விரிவாக கலந்துரையாடுவதன் மூலமே உண்மை பிரச்சினைகள் வெளியில் தெரியவரும்.
இவற்றுடன் கடுமையான போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் பல உள்ளுராட்சி மன்றங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய மத்திய அரசாங்கம் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வவுனியா நகருக்குள் சனத்தொகை அதிகரித்துள்ளமையினால் சிறந்த வடிகாலமைப்புக்களை ஏற்படுத்த உதவிகள் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இந்திய துணைத்தூதரக தூதுவர் வி.மாகலிங்கம் அதிகரிகளான, எஸ்.சிறிகாந் மற்றும் மார்வா ஆகியோரும் வவுனியா நகரசபை சார்பில் அணைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
By:-yasikanth