வவுனியா, பாடசாலையில் இருந்து மாணவர்கள் சிலரை இடைவிலத்திய அதிபர் மீது பெற்றோர் கொதிப்பு!
பாடசாலையில் மாணவர்களிடையே காதல் விவகாரம் காணப்படுவதாக தெரிவித்து சுமார் 10 மாணவர்களை இடைவிலத்தியதுடன் ஒரு மாணவனை தொடர்ந்து கல்வி கற்பதற்கும் அனுமதி மறுத்து அவருடைய பாடசாலை விடுகைப்பத்திரம் மற்றும் வவுனியா இந்துக் கல்லூரியினால் அம் மாணவனுக்கு வழங்கப்பட்டிருந்த க.பொ. த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்று அறிக்கை என்பவற்றில் சிவப்பு மையினால் எழுதப்பட்டு பாடசாலையில் கற்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய மாணவர்கள் ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கு பாடசாலைக்கு சமூகமளிக்கவும் பாடசாலை அதிபரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அதனை தெளிவுபடுத்தி கடிதம் மூலம் அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொதிப்படைந்த மாணவர்களின் பெற்றோர் சிறுவர்களின் உரிமையை மீறுவதற்கு அதிபருக்கு அதிகாரமில்லை எனவும் பாடசாலையில் கல்வி பயிலும் வயதுள்ள மாணவனை பாடசாலையில் கல்வி கற்பதற்கு நிரந்தர தடை விதிப்பதற்கு அதிபருக்கு அதிகாரமுள்ளதா எனவும் கேள்வி எழுப்பிய நிலையில் வலயக் கல்விப்பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிப்படைந்த மாணவர்களுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவனியா கிளையினரும் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு சென்றிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜாவிடம் கேட்டபோது மேற்படி விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர் தமக்கு முறையிட்டிருந்ததாகவும் தற்போது மாணவர்கள் தரப்பிலும் தம்மிடம் முறையிட்டுள்ளதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அவர் எவ்வாறாயினும் மாணவர்களின் கல்வி பாதிப்படையாத விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
By<-yasikanth