நலன்புரி நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை மீள்குடியமர்த்தி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியுடன் நலன்புரி நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வவுனியா, கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 6 ஆயிரத்து 31 பேர் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மீள்குடியமர்த்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சந்திரசிறி தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தினரின் மனிதநேய நடவடிக்கையின் போது 2 இலட்சத்து 95 ஆயிரத்து 873 பேர் இடம்பெயர்ந்தனர். ஆனால் தற்போது, 6 ஆயிரத்து 31 பேர் மாத்திரமே நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், 30 வருட யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்களில் பெருந்தொகயானவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றியமை இலங்கைக்கு உலக சாதனையாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியமர்த்தப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் எஞ்சி உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக ஜூலை மாத இறுதிக்கு முன்னர் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாக்கப்படும். இம்மாதம் 31ம் திகதியுடன் சிவநகர், புதுக்குடியிருப்பு மேற்கு, மல்லிகை தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைகின்றன.

புதுக்குடியிருப்பு கிழக்கில் ஜூன் 22ம் திகதியுடனும், அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் கிழக்கு மந்துவில் ஆகிய பிரதேசங்களில் ஜூன் 30ம் திகதியுடனும், ஆனந்தபுரம் பிரதேசத்தில் ஜூலை 31ம் திகதியுடனும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.

எனினும், முகமாலை பிரதேசத்தில் காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றும் பணிகளில் 07 உள்ளூர் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.

இதுவரை வடமாகாணத்தில் 1150.33 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.