உண்ணாவிரதத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி பங்குபற்றும்! ஜமமு ஊடக செயலாளர்
இது தொடர்பில் கூட்டமைப்பு தலைவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் எமது தலைவர் மனோ கணேசனுக்கு விடுத்துள்ள அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு கிழக்கு இணை அமைப்பாளருமான, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா தெரிவித்துள்ளார்.
தமது உறவுகளை சிறைகூடங்களில் தவிக்கவிட்டுள்ள குடும்பங்களின் அங்கத்தவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து அணிதிரண்டு வந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நமது கட்சியும் கலந்துகொள்ளும் நாளைய சாத்வீக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு அதை பெரும் வெற்றிபெறச் செய்யவேண்டும் என அனைத்து பாதிக்கப்பட குடும்ப அங்கத்தவர்களுக்கும் நமது கட்சி அழைப்பு விடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஐக்கியப்பட்டு மக்களை அணிதிரட்டி ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எமது கட்சியின் கொள்கையாகும்.
நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில், தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை கொடுமைகளுக்கு எதிராக, எமது தலைவர் மனோ கணேசனின் தலைமையில் நமது கட்சி பல்வேறு மனித உரிமை போராட்டங்களை தலைநகரில் தொடர்ச்சியாக முன்னெடுத்தது. எமது அன்றைய போராட்டங்களில் கூட்டமைப்பு தலைவர்கள் பங்கெடுத்தார்கள். அது எமக்கு பாரிய மனோ திடத்தை அளித்தது.
இன்று தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை கண்கூடாக பார்க்கிறோம்.
இந்நிலையில் கூட்டமைப்பின் வவுனியா கிளையினர் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம், நாட்டையும், சர்வதேசத்தையும் இப்பிரச்சினையின்பால் தட்டி எழுப்ப வேண்டும்.
இந்த உயரிய நோக்கத்திற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்கும். என்றார்.
By:-yasikanth