கல்விக்கான உரிமையில் ஆரம்பித்த எமது போரட்டம் காலப்போக்கில் தாயகத்தை மீட்கும் போராக பரிணாமம் பெற்றது!- எம்.எம்.ரதன்

கல்விக்கான உரிமையில் தான் எமது போராட்டம் ஆரம்பமாகியது. அது காலப்போக்கில் தாயகத்தை மீட்கும் முழு போராக பரிணாமம் பெற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உப-தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

நெளுக்குளம் லயா கல்லூரி நடாத்திய மாணவர்கள் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றபோது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கணித பாட ஆசிரியர் க.சுரேஸ்குமார் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து சிறப்புறை ஆற்றிய ரதன்.

தமிழினத்தின் கடந்த கால வரலாற்று பின்னணிகளை பார்க்கின்ற போது தமிழர்களின் அழிக்க முடியாத சொத்து கல்விதான். என்பதை மறுக்க முடியாது. எனவே அதனை பாதுகாத்து பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியவர்கள்.

எமது போராட்ட வரலாற்றை மீட்டுப் பார்த்தால் அதற்கு கல்வித் தரப்படுத்தல் தான் காரணமாக அமைந்துள்ளது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல்தடவையாக படித்த இலங்கையார் என்ற அடிப்படையில் கி.பி.1910ம் ஆண்டு சட்டசபைக்கு தெரிவாகியது சேர் பொன் இராமநாதன் என்ற தமிழரே.

இதன் பின்பு குறிப்பாக எமது தேசத்தில் 1948ம் ஆண்டுக்கு பின்னர் எமது சூழ்நிலைகள் மாறியது. பெரும்பான்மை இனம் என்று தங்களை நினைப்பவர்களுக்கும் ஆட்சியாளர்களும் தமிழனத்தில் யாரும் கல்வியில் மேலாக கூடாது என்பதில் கவனமாக இருத்தனர்.

கி.பி. 1927ம் ஆண்டு சிறிமாவோ ஆட்சியில் தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாகவும். பின்னர் பல்கலைக்கழக தரப்படுத்தலில் ஏற்பட்ட அநீதி காரணமாகவுமே. ஆயுத போராட்டம் தோன்றியது.

கல்வியில் இழைக்கப்பட்ட அநீதி காரணமாக அதற்காக போராடி முதலாவது மாணவப் போராளியான பொன் சிவகுமாரன் 1975ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக எமது சமூகம் பல இடர்களை கல்வி ரீதியாக சந்தித்ததை யாரும் மறுக்க முடியாது. பாடசாலைகள் பல நிர்மூலமாக்கப்பட்டன. பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என எத்தனையோ பேரினது உயிர்களை இந்த யுத்தம் பலியெடுத்தது.

பல்வேறுபட்ட இடர்களையும், இன்னல்களையும். துயரங்களையும். இடப்பெயர்வுகள் போராட்ட சூழ்நிலைகள் உயிரிழப்புக்கள் என அவல வாழ்வுக்கு மத்தியிலும் தமிழினத்தின் மாணவச் சமூகம் கல்வியில் வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது.

2009ம் ஆண்டு இறுதியுத்ததிற்கு பின்னரும் கூட தரம்-05 புலமைப் பரீட்சையில், க.பொ.த சாதரணதர பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சை போன்ற பரீட்சைகளில் உச்சக்கட்ட பெறுபேறுகளை எமது மாணவர்கள் திறமையின் அடிப்படையில் வெளிக்காட்டி வருவது பாராட்டத்தக்கது.

தமிழ் சமூகம் மாணவர்கள் எந்தச் சவால்களைச் சந்தித்தாலும் மனம் தளராது உறுதியுடன் முன்னேறும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதையே இவை எடுத்துக்காட்டுவதாக என அவர் மேலும் குறிப்பிட்டார்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.