தென்பகுதி மக்களை திசைதிருப்புவதற்காகவே அரச அதிபர்களின் இடமாற்றம்

வவுனியாவிற்கு காலி அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதையும் ஏனைய அரசாங்க அதிபர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசின் நிலையில்லா கொள்கைகளின் விளைவாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வரலாறு காணாத விலையேற்றம் அனைத்து மக்களையும் வாட்டத் தொடங்கியுள்ளது.

இதிலிருந்து மக்களை திசை திருப்பும் நோக்கிலேயே பிறமத வழிபாட்டுத்தலங்களை இடித்தல், தமிழ்ப் பிரதேசங்களில் வலுக்கட்டாயமாகத் தனியார்காணிகளை அபகரித்து புத்தகோயில்களைக் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது.

இதனுடன் இணைந்ததாக அல்லது இதற்கு இணையாக இப்பொழுது வடக்கு-கிழக்கில் பணிபுரியும் அரசாங்க அதிபர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு-கிழக்கில் இப்பொழுதுதான் மீள்குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தங்களது மொழியில் பேசக்கூடிய அதிகாரிகளிடம் சென்று தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் எமது மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவரை வவுனியாவிற்குக் கொண்டுவருவதால் மேலும் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

இந்த அரசு நேரிடையாக ஒரு மாவட்டத்திற்கு தென்பகுதிப் பெரும்பான்மையினரை நியமிப்பதற்கு மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களை இடமாற்றம் செய்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்பு நடைபெற்ற இடமாற்றத்தில் முல்லைத்தீவில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பத்திநாதனை தென்பகுதிக்கு மாற்றி தென்பகுதியிலிருந்து ஒரு அரசாங்க அதிபரை மன்னாருக்குக் கொண்டுவருவதற்காக மன்னாரில் கடமைபுரிந்து வந்த வேதநாயகத்தை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டு, மன்னாருக்கு தென்பகுதி பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமித்தது.

என்ன நடந்தது? இப்பொழுது மன்னாரில் சிங்களக் குடியேற்றமும், புத்தகோயில் அமைக்கும் பணிகளும் வெகுவிரைவாக நடைபெறுகின்றன. அதே காரணத்திற்காகவே இப்பொழுது வவுனியாவிற்கும் தென்பகுதிப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழ் மக்களின் விவசாயக் காணிகளை உள்ளடக்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான கொக்கச்சான்குளம் ஒருவருக்கும் தெரியாமலேயே களவாடப்பட்டு சிங்கள மக்களைக் குடியேற்றி வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

உயிலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நிர்மூலமாக்கப்பட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுவிட்டது. கனகராயன் குளத்தில் தனியாருடைய காணியில் புத்தர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்பொழுது சிங்கள அரசாங்க அதிபரின் நியமனத்தினால் சிங்கள மயமாக்கல் இன்னமும் வேகமாக மேற்கொள்ளப்படும் ஆபத்து இருக்கின்றது.

வெகுவிரைவில் முல்லைத்தீவிற்கும் இது விஸ்தரிக்கப்படும். அத்துடன் வடக்கு-கிழக்கின் ஒட்டுமொத்த மாவட்டங்களிலும் தென்பகுதிப் பெரும்பான்மையினரையே அரசாங்க அதிபர்களாகவும் உயரதிகாரிகளாகவும் நியமிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே நாம் மன்னார் மற்றும் வவுனியாவிற்கான அரசாங்க அதிபர் நியமனங்களை அவதானிக்கின்றோம்.

இதன்மூலம் வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி வடக்கு-கிழக்குப் பெரும்பான்மையான தமிழ்ச் சமூகத்தை அதன் சொந்த இடத்திலேயே சிறுபான்மையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை வவுனியாவிற்கு சிங்கள அரசாங்க அதிபரை நியமிப்பதற்காகவே யாழ்ப்பாணம் அதிபருக்கு எவ்விதப் பொறுப்பும் கொடுக்காமல் கொழும்பிற்கு அழைத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி, வவுனியா அரசாங்க அதிபரை மட்டக்களப்பிற்கு மாற்றி, வவுனியாவிற்கு காலி சிங்கள அரசாங்க அதிபர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு-கிழக்கைச் சேர்ந்த மூன்று அரசாங்க அதிபர்களான நிக்லாஸ்பிள்ளை, பத்திநாதன் மற்றும் இமெல்டா சுகுமார் ஆகியோரை இந்த அரசு திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றியுள்ளது.

ஏற்கனவே இலங்கை நிர்வாகசபையில் தரம் ஒன்றிற்குத் தகுதிவாய்ந்த தமிழ் அதிகாரிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில், அரசு அவர்களையும் அங்கிருந்து தூக்கியெறிந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கை நிர்வாகசபைக்கான தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருப்பவர்களையும் வெளியேற்றுவது எந்தவகையில் நியாயமானது? அமைச்சர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறைவேற்றாமைக்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்நாட்டின் எப்பாகத்திற்கும் சென்று கடமையாற்ற வேண்டியவர்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்றைய சூழலில் இது ஒரு பொருத்தமற்ற, திட்டமிட்ட ஒரு தமிழ் இனவிரோத செயற்பாடாகவே எம்மால் அவதானிக்க முடிகின்றது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டிய அரசு தமிழ் அரசாங்க அதிபர்களை இடமாற்றம் செய்திருப்பதன் மூலம் தமிழ் மக்களின் மீது ஒரு உளவியல் யுத்தத்தினைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

இந்த அரசிற்கு தான் செய்வது பிழை என்று தெரிந்திருப்பதனாலேயே இவ்வாறு சுற்றிவளைத்து மாற்றங்களைச் செய்கிறது. இத்தகைய இடமாற்றங்கள் மூலம் இந்நாட்டில் எத்தகைய நல்லிணக்கமும் ஏற்படாது. இருக்கின்ற இடைவெளி இன்னமும் அதிகரிக்கவே செய்யும்.

நிலையான அரசியல் தீர்வின் மூலம் எட்டப்படுகின்ற நீடித்த சமாதானமே அனைவரிடத்திலும் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும். அரசு இத்தகைய செயல்முறைகளை உடன் கைவிடவேண்டும்.

நல்லிணக்கம் குறித்து பேசுகின்ற சகல சர்வதேச நிறுவனங்களும் இந்தியா உட்பட ஏனைய நாடுகளின் இராஜதந்திரிகளும் அரசாங்கத்தின் தமிழ் இனவிரோதச் செயலைக் கண்டிக்க வேண்டுமென்பதுடன் இவை நிறுத்தப்படுவதற்கான அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.