கள்ளத்தனமாக கடல்வழியாக தப்ப முயன்ற இலங்கையர் மூவர் இராமேஸ்வரத்தில் கைது (வவுனியா)

இராமேஸ்வரம் அந்தோணியார் கோவில் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவேளை கடல்வழியாக இலங்கைக்கு தப்பியோடு முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்து மேலும் தெரியவருவது என்னவெனில்.,

கடற்கரையில் ஒரு படகில் பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலாம்(54),  சுசீந்த நிஷாந்தன்(43),  முகமது காதர்(49) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்துல் சலாம், சுசீந்த நிஷாந்தன் ஆகியோர் கடந்த 2001 ம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் 30 கிலோ ஹெராயின் கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்ற தகவல் கிடைத்தது.

புழல் சிறையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் முகமது காதர் என்பவர் கடந்த 2003 ம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து தங்கியிருந்து விமானம் மூலமாக பொருட்களை அனுப்பும் வேலைகளை செய்து வந்தார் என்பதும் தெரிய வந்தது.

இந்தநிலையில் இவர்கள் 3 பேரும் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்து நாகர்கோவிலை சேர்ந்த படகு முகவர் சித்திக் என்பவர் மூலமாக இலங்கைக்கு கள்ளத்தனமாக செல்ல முடிவு செய்தனர். இதற்காக படகு முகவர் சித்திக்கிடம் தலா இந்திய ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இராமேஸ்வரம் கடற்கரையில் பதுங்கி இருக்க வேண்டும் என்றும் பிளாஸ்டிக் படகு வந்தவுடன் அதில் ஏறி இலங்கைக்கு சென்று விடுமாறும் சித்திக் தெரிவித்துள்ளார். அதன்படி 3 பேரும் இலங்கை செல்வதற்காக படகுக்காக கடற்கரையில் காத்திருந்தனர். அப்போது தான் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

எந்த ஆவணங்களும் இல்லாமல் கள்ளத்தனமாக படகில் ஏறி இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அப்துல் சலாம் (54) சுசீந்த நிஷாந்தன் (43) முகமது காதர்(49) கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து இராமேஸ்வரம் கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பொலிஸார் அவர்கள் 3 பேர் மீதும் குடிவரவு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இவர்கள் 3 பேரையும் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

கைதானவர்களில் சுசீந்த நிஷாந்தன் சிங்களத்தை சேர்ந்தவர். மற்ற இருவரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் ஆவர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக படகு முகவர் சித்திக் உட்பட உள்ளூரைச் சேர்ந்த சிலரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

BY:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.