இந்தியாவின் சைக்கிள் இல்லாமல் டோக்கனுடன் திரும்பிச் சென்ற வடபகுதி மக்கள்!
கடந்த 18 ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தின் முன்பாக வைத்து இந்திய அரசின் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதற்காக வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தலா 50 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அரச பேருந்து மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். காலையிலேயே குறித்த நிகழ்வுக்காக பொது மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இருப்பினும் நிகழ்வு மாலை 4 மணியளவிலேயே ஆரம்பமானது.உணவில்லாமல் காத்துக்கிடந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பயனாளிகளுக்குரிய சைக்கிள்கள் வழங்கப்படாமல் அதற்குரிய "டோக்கனுடன்' மட்டும் மக்கள் திரும்பிச் சென்றனர். பொதுமக்கள் ஏமாற்றத்துடன் இரவு வேளையே திரும்பிக் கொண்டு செல்லப்பட்டு நகரப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்.
வெறும் "டோக்கனை' மட்டும் பெறுவதற்காக பொதுமக்கள் அன்றைய நாள் முழுவதையும் வீணே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது அரசியல் அதிகாரங்களைக் காட்ட பொது மக்களை இவ்வாறு பாடாய்ப்படுத்துகின்றனர் என்று அரச அதிகாரி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
BY:-yasi