புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 73 பேர் இன்று விடுதலை
முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 73 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சமூகமயப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் பி.ரி.கொடிபுல்ல, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப்பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் படை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 62 ஆண்களும் 11 பெண்களும் அடங்குகின்றனர்.
இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சுமார் 12 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளதுடன் அவர்கள் வடகிழக்கின் பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த நிலையில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.
இதுவரையில் 33 தொகுதியினர்ராக 10375 விடுதலைப்புலி உறுப்பினர்கள் கடந்த மூன்று வருடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புனர்வாழ்வு பெற்றுவருவோரில் மேலும் 500 பேர் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார்.
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு மட்டக்களப்பில் விடுவிக்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
By:-yasi