கணவன்- மனைவி வெட்டிப் படுகொலை: வவுனியாவில் சம்பவம்

வவுனியா மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தில் நேற்று கணவன்- மனைவி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் செய்யபட்ட இப்பகுதியில் கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வந்த கந்தையா முத்தையா (வயது 67), அவரது மனைவி முத்தையா பரமேஸ்வரி ஆகிய இருவருமே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின்போது பெண்ணின் சடலம் வீட்டிற்கு அருகாமையிலும் அவரது கணவரின் சடலம் வீட்டில் இருந்து சற்று தொலைவில் காணப்பட்டதாகவும் அப்பிரதேசத்தின் கிராமசேவகர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட இருவரது கைகளிலும் மோதிர விரல் வெட்டப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்ற கிராமம் பன்றிக்கெய்தகுளத்தில் இரட்டைக்கொலை

வவுனியா பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமம் பன்றிக்கெய்தகுளம். இப்பகுதியில் இப்பொழுதுதான் மக்கள் மெதுவாக மீள்குடியேறி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் அச்சத்தை அதிகரிக்கின்ற வகையில் நேற்று இரவு இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:

பன்றிக்கெய்தகுளத்தில் வசித்துவந்த கந்தையா முத்தையா (65) மற்றும் அவரது துணைவியார் முத்தையா பரமேஸ்வரி (58) ஆகியோர் நேற்றிரவு கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளிகள் கந்தையா முத்தையாவை வீட்டிலிருந்து சுமார் 500மீ தூரத்திற்கு அழைத்துச்சென்று கைவிரலைவெட்டி மோதிரத்தைக் கழற்றிக்கொண்டதுடன் அவரை அந்த இடத்திலேயே கொலையும் செய்துள்ளனர். அவரது மனைவியான முத்தையா பரமேஸ்வரியை அவர்களது வீட்டுப்பகுதியில் வைத்தே கொலை செய்துள்ளனர்.

சுமார் 35பவுண் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட இருவரும் அண்மையில்தான் இலண்டனிலுள்ள தமது மகன்கள் தவபாலன், தவரஞ்சன் மற்றும் மகள் சசிகலா ஆகியோரைப் பார்த்துவிட்டு நாடுதிரும்பி தமது காணியில் தற்காலிகக் கொட்டிலில் குடியிருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு திருமதி பரமேஸ்வரி தனது இரவு உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சம்பவ இடத்திற்கருகில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் சமையலறையில் வேகவைத்து எடுத்துவைக்கப்பட்ட ஒரு ரொட்டியும் ஒரு ரொட்டி அடுப்பிலிடுவதற்குத் தயாராக இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட திரு. கந்தையா முத்தையா வவுனியா கோமரசங்குளம் பாடசாலை அதிபர் திரு.தர்மகுலசிங்கம் அவர்களின் மூத்த சகோதரர் ஆவார். அத்துடன் கந்தையா முத்தையா தம்பதிகளின் புதல்விகளில் ஒருவரான திருமதி சந்திரிகா, வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வருகிறார்.

சம்பவத்தைக் கேள்விப்பட்டதுடன், வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா, வவுனியா பிரதேசசபை தவிசாளர் சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஏராளமான காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர். மேற்படிச் சம்பவம் மீள்குடியேறிய மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.