கொலைமிரட்டல், அச்சுறுத்தல்களைக் கண்டு பயந்தோடுவதற்கு நாம் பனங்காட்டு நரியல்ல( m.m.ரதன்)

எனக்கு எதிராக விடப்பட்டுள்ள கொலைமிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களையும் கண்டு பயந்தோடுவதற்கு பனங்காட்டு நரியல்ல. நாம் உயரிய இலட்சிய வழியில் உண்மையான ஜனநாயக வழியில் வடகிழக்கு இணைந்த தாயகத்தின் விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உப தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்கு சொந்தமான பட்டானிசூர் முஸ்லிம் மையவாடிக்குள் சட்டவிரோதமாகக் கட்டப்படும் கட்டிட வேலைகளை நிறுத்தக் கோரியும் நகரசபை தலைவர், உபதலைவர் மீது ஜிகாத் போராளிகளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் வவுனியா நகரசபை முன்றலில் இன்று நடைபெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ரதன்,

உள்ளூராட்சி மன்ற சட்டதிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக சுடுகாடு, இடுகாடு என்பனவற்றில் கட்டிடங்கள் எதையும் அமைக்க முடியாது. இதனால் தான் 08.07.2011 நடைபெற்ற கூட்டத்திலும் அதன் பின் 28.07.2011 நடைபெற்ற நகரசபை மாதாந்தக் கூட்டத்திலும் இதனை திட்டவட்டமாக அறிவித்தோம்.

ஆயினும் இவ்விடயம் தொடர்பாக இறுதி முடிவெடுக்க 02.08.2011 அன்று நகரசபை விசேட கூட்டம் கூட்டினோம். அக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் அப்துல்பாரி மற்றும் முநொபர் ஆகியோர் இனவிரோதக் கருத்துக்களை அள்ளி வீசினர்.

என்னை நோக்கி இனவாதி, புலி எனவும் கோசம் போட்டனர். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தினர். இறுதியில் முள்ளிவாய்க்காலுடன் உங்கள் ஆட்டம் முடிந்ததாக கூறினர்.

அவ்வேளையில் நான் சபையிலே முள்ளிவாய்க்கால் தமிழினத்தின் முடிவல்ல அதுதான் ஆரம்பம் என திட்டவட்டமாக அறிவித்தேன்.

எங்கள் விடுதலை போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது விடுதலை வீச்சு அதன் தாகம் குறையவில்லை. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரமறவர்களின் தியாகங்களையும் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர் இழப்புக்களும் வீண் போகாது என்ற அடிப்படையில் தான் நாம் ஜனநாயகப் போராளியாக இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடுகின்றோம்.

இவ் உண்ணாவிரத போராட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது அல்ல சட்டத்தின் பிரகாரம் அதை மீறி நடாத்தப்படும் செயலுக்கான கண்டன உண்ணாவிரதம். இதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிடுமாறு வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் நேரடியாக வந்து கேட்ட போதும் மறுத்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

(by


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.