மாணவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் திட்டம் தேவை


cte-10வவுனியா நகரம் வடக்கின் முக்கிய கேந்திரம். இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்தபின்னர்  படுகொலைச்சம்பவங்கள், ஆயுதப்படைகளின் தாக்குதல், ஆட்கடத்தல்கள், தேடுதல் வேட்டைகள், தீவைப்புகள்... இயக்கமோதல்கள்... என துர்ச்சம்பவங்களின் ஒட்டுமொத்த பிரதேசமாக ஒருகாலத்தில் மாறியிருந்தது.
நண்பர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் தாக்குதல் மற்றும் தீவைப்பு குறித்து ஒரு வவுனியா நகரக்காட்சிவருகிறது. நாவலின் நாயகன் தமிழன். அவனது உயிரை ஒரு சிங்கள யுவதி, தனது கணவன் என்றுசொல்லி ஆயுதப்படையினரிடமிருந்து காப்பாற்றுவாள்.
அதே போன்றதொரு காட்ச,p காமினிபொன்சேகாவின் சருங்கலே படத்திலும் வருகிறது. 1958 கலவரம். ஒரு சைவஹோட்டலில் இனவாதிகள் தாக்குதல் நடத்தும்போது நடராஜா என்ற தமிழ்ப்பாத்திரம் ஏற்று நடித்த காமினிபொன்சேகாவை, சிங்கள கதாநாயகி வீணா ஜயக்கொடி தனது கணவர் என்று சொல்லி காப்பாற்றுவாள்.
வவுனியாவில் பிச்சைக்காரர்கள் இல்லை என்று 1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸி. சிவசிதம்பரம் பாராளுமன்றத்தில் மிகவும் பெருமையுடன் கூறினார். அத்தகைய பெருமைபெற்ற வவுனியா நகரம் 1972 இற்குப்பின்னர் அடிக்கடி பதட்டத்தையே ஊடகங்களில் செய்தியாக்கியது.
2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னர் வவுனியா மாவட்டத்தில் அகதிமுகாம்கள். புனர்வாழ்வு மையங்கள் உருவாகியிருந்தன. பல தொண்டு நிறுவனங்களும் தோன்றின. வவுனியா குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மற்றும் இனவிடுதலைப்போராட்ட வரலாறுகளில் வவுனியா தவிர்க்கமுடியாமல் இடம்பெறும்.
பண்டாரவன்னியன் சிலை மட்டுமல்ல புத்தர் சிலைகளும் இந்த நகரின் மையத்தில் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் பல கிராமங்கள் ஏதாவது ஒரு குளத்தின் பெயரில்தான் பிரபலமாகியுள்ளன.
செட்டிகுளம், பாவற்குளம், பூவரசன்குளம், வேப்பங்குளம், விளக்குவைத்த குளம், இறம்பைக்குளம், மாதர்பணிக்கர்மகிழங்குளம், நெலுக்குளம்,  சின்னப்பூவரசன்குளம், அனந்தர்புளியங்குளம், பெரியகுளம், கனகராயன்குளம், கூமாங்குளம், முதலியார்குளம், பெரியகோமரசன் குளம், புளியங்குளம், இழுப்பைக்குளம், தாண்டிக்குளம்,
இந்தப்பட்டியலில் இருந்து வவுனியா பிரதேசம் ஒரு விவசாயபெருநிலப்பரப்பு என்ற முடிவுக்கு இலகுவாக வந்துவிடமுடியும். அங்கு நெற்பயிர்ச்செய்கை, தோட்டப்பயிர்ச்செய்கை முதலானவற்றுக்கு போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமலும் போர்க்காரணங்களினாலும் பொதுமக்கள் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
போர் முடிவுற்ற காலப்பகுதியில் மெனிக்பார்ம் அகதி முகாமலிருந்த மக்களுக்காக எமது இலங்கை மாணவர்கல்வி நிதியம் வவுனியாவில் இயங்கிய நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ஊடாக கணிசமான உதவிகளை வழங்கியிருக்கிறது. அவ்வேளையில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த சில மாணவர்கள் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு தெரிவாகியிரு;தார்கcte-5ள்.
அவர்களின் நலன்களை கவனிக்கவேண்டும் என்று அங்கு விரிவுரையாளராக பணியிலிருந்த எனது இலக்கிய நண்பர் கந்தையா ஸ்ரீகணேசன் தொலைபேசி ஊடாக ஒருநாள் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அகதிமுகாமிலிருந்து வளாகத்திற்கு வந்து பயிலும் மாணவர்கள் பத்துப்பேரின் விபரங்களையும் அனுப்பியிருந்தார்.
அவர்களுக்கு அவசரத்தேவையாக அகதி முகாமகளிலிருந்து பல்கலைக்கழக வளாகம் வந்துசெல்லும் போக்குவரத்துக்கு துவிச்சக்கரவண்டிகள் தேவைப்பட்டன. இந்தக்கோரிக்கையை எமது கல்வி நிதிய பரிபாலன சபை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே போரில் பெற்றவர்களை இழந்தவர்களிடம் அதற்காக வேண்டுகோள் விடுக்காமல் மேலும் சில அன்பர்களின் தயவை நாடினோம்.
போர் முடிந்த சூழலில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு பலரும் முன்வந்திருந்தனர். சிலநாட்களிலேயே பத்து துவிச்சக்கரவண்டிகளுக்கான நன்கொடை கிடைத்தது. அத்துடன் குறிப்பிட்ட மாணவர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது அறிந்து, அவர்கள் தமது பல்கலைக்கழக பட்டப்படிப்பு நிறைவுசெய்யும்வரையில் அதற்கான செலவுகளை சமாளிக்கவும் உதவி வழங்குவதற்கு எமது கல்விநிதியம் முன்வந்தது. குறிப்பிட்ட மாணவர்களுக்கும் உதவும் அன்பர்கள் தெரிவானார்கள்.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இம்மாணவர்களுக்கு நிதியுதவி தரப்பட்டது. 2010 ஜனவரியில் வளாகத்தில் அச்சமயம் வளாக முதல்வராக பணியிலிருந்த கலாநிதி நந்தகுமார் முன்னிலையில் மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கரவண்டிகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் மருத்துவர்கள் நடேசன், நரேந்திரன் நோர்வேயிலிருந்து அருள்நேசன், லண்டனிலிருந்து சூரியசேகரம் உட்பட பலர் சென்றிருந்தோம்.
எமது கல்வி நிதியம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நிதியுதவி பெற்ற அந்த வேப்பங்குளம் மாணவி கிருஷ்ணவேணியும் வந்து கலந்துகொண்டார். அப்பொழுது அவர் அங்கு ஒரு பாடசாலை அதிபராக பணியிலிருந்தார். அவரை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
அந்த அறிமுகமானது புதிதாக உதவிக்காக இணைந்துகொண்ட வவுனியா வளாக மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. தாமும் நிதியத்தின் உதவியை துஷ்பிரயோகம் செய்யாமல் உரியமுறையில் பயன்படுத்தி, வாழ்வில் குறிப்பிடத்தகுந்த உயர்ச்சியை அடையவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது.
வெளிநாடுகளிலிருந்து உதவிபெறும் மாணவர்களாயினும் விதவைத்தாய்மாராயினும் கிடைக்கப்பெறும் உதவியின் ஊடாக வாழ்வில் முன்னேறுவதற்கு முயற்சிக்கவேண்டும்.
“பசித்தவனுக்கு மீனைக்கொடுக்காதே...ஒரு தூண்டிலைக்கொடு” என்றார் மாஓசேதுங்.
  இன்றைய இலங்கையில் புனர்வாழ்வுப்பணிகளில் ஈடுபடுபவர்களும் பயனாளிகளும் தமது மனதில் வைத்திருக்கவேண்டிய தாரக மந்திரம் அதுவாகத்தானிருக்கவேண்டும்.
சமீபத்திய பயணத்தில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் குறிப்பிட்ட மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு ஒன்றுகூடல் தகவல் அமர்வுக்கு சென்றிருந்துபொழுது எமது நிதியத்திடமிருந்து துவிச்சக்கரவண்டிகளை 2010 ஆண்டு தொடக்கத்தில் பெற்றுக்கொண்ட மாணவிகள் சிலர் அந்த துவிச்சக்கரவண்டிகளில் வந்து இறங்கி, எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு “ சேர்...உங்கட கல்வி நிதியம் தந்த சைக்கிள் சேர்...” என்று சொன்னபோது பரஸ்பரம் நெகிழ்ந்துபோனோம்.
வளாகத்தின் புதிய தலைவர் கலாநிதி அருள்வேல், முன்னாள் தலைவர் பேராசிரியர் நந்தகுமார், மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலாநிதிகள் எஸ்.கிருஷ்ணகுமார், மங்களேஸ்வரன், சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம். கணேசலிங்கம் ஆகியோர் மற்றும் வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு. த.கணேஷ், அந்த அமைப்பின் பணியாளர் திரு. அன்ரன் ஆகியோருடன் குறிப்பிட்ட உதவிபெறும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
cte-4இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்பகின்றேன். இதுபோன்ற எமது கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு பொன்னாடைகள் பூமாலைகள் மற்றும் அரசியல்வாதிகள் முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும் என்ற முன்நிபந்தனையுடன்தான் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யுமாறு ஏற்கனவே சொல்லிவிடுவோம். எமது நிதியத்தின்   உதவிபெறும் மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்யும் தொடர்பாளர்கள் பிரதிநிதிகள் எமது இந்த மென்மையான நிபந்தனையை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு கல்வி அமைச்சர் வந்தாலும் சரி அரசியல்வாதிகள் வந்தாலும் சரி கட்சி, இயக்க அரசியல் பேசாமல் தவிர்ப்பதுதான் நல்லது.
தாம் பின்னால் நின்றுகொண்டு மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். அடக்குமுறைகளுக்கு ஆளாவதும் மாணவர்கள்தான்.
கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கல்வித்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமிடத்து எந்த விக்கினமும் இல்லை. ஆனால் இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்களே.... அவர்கள், மாணவர்களுக்காக பேசமாட்டார்கள் ஊடகங்களுக்காகவே பேசுவார்கள். சூளுரைப்பார்கள். சவால்விடுவார்கள்.
ஊடகங்களுக்கும் பெரிய எழத்தில் செய்திவெளியிடுவதற்கு தீணி கிடைத்துவிடும். அவற்றைப்படிக்கும்  மக்களுக்கும் (வாசகர்கள்) மெல்லுவதற்கு அவல் கிடைக்கும். மாணவருக்கு என்ன பயன்?
போருக்குப்பின்னர் வடக்கு ,கிழக்கில் பல பாடசாலைகள் அடிப்படைத்தேவைகள் இல்லாமல், தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனம் இல்லாமல் பெரிதும் அவதியுறுகின்றன. பல பாடசாலைகளில் ஆங்கில மற்றும் கணித ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு. போர்நடந்த பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாழும் ஊர்களிலும் இந்த ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.
 இதுதொடர்பாக பல கசப்பான உண்மைகள் தொடருவதனால்  இதுபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
வவுனியா வளாகத்தில் பயிலும் மாணவர்களிடம் நான் ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்தேன். வவுனியா பிரதேசத்தில் கல்வியில் பின்தங்கியிருக்கும் ஏராளமான மாணவர்கள் தனியார் டியூட்டரிகளுக்குச்சென்று அல்லது பாடசாலையில் அரச சம்பளம் வாங்கிக்கொண்டு தமது வீட்டில் மாலைவேளைகளில் ரியூஷன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களிடம் சென்று படித்து அதற்கான வேதனத்தை வழங்கமுடியாமல்  பலத்த சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.
அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் கூட வசதி படைத்த எம்மவர் தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்க்காமல் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். அத்துடன் வாராந்தம் ரியூசனுக்கும் செலவிடுகிறார்கள்.
ஏன்...?cte-9
தங்கள் பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்ற சாதாரண விருப்பம்தான். அதேபோன்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான ஏழை மாணவர்கள் அந்த ரியூசன் வசதியின்றி அல்லது ரியூசன் வகுப்புகளுக்குச்சென்றும் உரிய நேரத்தில் அந்த ஆசிரியருக்கு வேதனத்தை வழங்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மனம்வைத்தால் இந்தக்குறையை ஓரளவு போக்கமுடியும். தமது ஓய்வுநேரங்களில் குறிப்பிட்ட கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு வேதனம் இன்றி இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கமுடியும். செய்தால் பெரிய புண்ணியம் கிடைக்கும். செய்வீர்களா?” என்று கேட்டேன்.
“ ஓம் சேர் நிச்சயம் செய்வோம்,...” என்று ஏகமனதாக குரல்கொடுத்தார்கள்.
வவுனியா எமது இணைப்பாளர் கணேஷ் அவர்களிடம் அதற்கான ஓழுங்கமைப்புத்திட்டத்தை (நேவ றுழசம) உருவாக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
பல்கலைக்கழக மாணவர்களை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்திக்கொள்வதன் ஊடாக இலங்கையில் போர் நடந்த பிரதேசங்களில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே கல்வித்தரத்தை மேம்படுத்தமுடியும்.
கிளிநொச்சி பற்றி இணையத்தளங்களில் அவ்வப்போது கவலைக்குரிய செய்திகள்தான்; வெளியாகின்றன.  அந்தப்பிரதேசத்தில் ஒரு சிங்கள இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர், வாராந்த விடுமுறை நாட்களில் சில தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கின்றார் என்ற ஒத்தடம் தரும் தகவல், அந்தப் பாதகமான பரபரப்பான செய்திகளினால் அடங்கிப்போய்விடுகிறது.

News Source :  Theni

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.