வவுனியா மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதல். ஒருவர் மண்டை பிளந்த நிலையில் வைத்தியசாலையில்.

வவுனியாவில் குறிப்பிட்ட காலப் பகுதியில் மிகச் சிறந்த வளர்ச்சியை பெற்று வந்த இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை சில காலங்களுக்கு முன்பு தான் இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலயம் என்று தரமுயர்த்தப்பட்டிருந்தது. இத் தருணத்தில் இன்று பாடசாலை ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குள் அங்கு மூர்க்கத்தனமான சண்டை இடம்பெற்றுள்ளது. 

2013, 2014 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்ற இருக்கும் கலைப்பிரிவு மாணவர்களுக்கிடையில் பாரிய மோதல் நிகழ்வுகள்அரங்கேறியிருக்கின்றன. இரு குழுவாகப் பிரிந்த மாணவர்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்து தன்னிச்சையாக சண்டை பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தும் இரு மாணவர்களுக்கிடையே இருந்த முறுகல் நிலையே இன்று கட்டுப்படுத்த முடியாத கோஸ்டி மோதலை உருவாக்கியிருக்கின்றது.

இதனை அடுத்து 2014 ம் ஆண்டு மாணவன் ஒருவனை சிரேஷ்ட மாணவன் ஒருவன் தாக்கியதில் மண்டை உடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதல் சம்பவங்களுக்கும், கோஷ்டி மோதலுக்கும் பின்னணியில் பாடசாலை நிர்வாகமே காரணமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களிடையே பாடசாலை நிர்வாகம் மற்றும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் காட்டி வந்த பாகுபாடும் முறையற்ற நடவடிக்கைகளுமே இப் பிரச்சினைக்கு பின்னணியில் திகழ்கின்றன.

இந்த சம்பவத்தையடுத்து பாடசாலை நிர்வாகம் இவ் வருடம் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களை பாரபட்சமாக பாடசாலையில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு மாணவர்கள் மீது எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது ஒரு பொறுப்புள்ள நிர்வாகம் செய்யக்கூடியதாக தென்படவில்லை. 

இது காலப்போக்கில் வளருமேயானால் பல கோஷ்டி மோதல்களை உருவாக்குவதோடு மாணவர் பழக்கங்களையும் மாற்றிவிடும். ஆசிரியர்கள் இப்போது தம் நிலைகளை தக்கவைப்பதில் முயற்சி செய்கின்றனரே தவிர ஆசிரிய நற் பண்புகளை கடைப்பிடிப்பதில்லை. இந்த சீர்கேடு பெரும்பாலும் தமிழ்ப் பாடசாலைகளிலேயே காணப்படுகின்றது.

வவுனியாவில் தமிழ் மத்திய மகாவித்தியாலயம், விபுலானந்தாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவ்வாறான கேவலமான நிகழ்வுகள் நடைபெறுவது சாதாரணமாகிவிட்டது. 

குறுகிய காலத்தில் பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் இருந்து மாணவர்கள் ஒரு குழுவினர் றவுடிகள் போல அருகேயுள்ள முருகனூர் பாடசாலை அதிபரை தாக்கியுள்ளனர். இது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உரிமை, போராட்டம் என்று பேசும் தமிழ்க் கட்சிகள் இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, கவனிக்காமல் இருப்பதோ கேலிக்கூத்தான விடயமாகும். மாணவர்கள் நல்வழிப்படுத்த நல்ல வழிகாட்டிகள்தான் நாட்டிற்கு தேவை என்பது மட்டும்தான் தற்போதைய உண்மை.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.