வவுனியாவில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் மும்முரம்
தேசிய ரீதியியல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து வவுனியா மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப நிகழ்வாக வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினுள் டெங்கு பரவும் இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கையுடன் அவற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றன. இதேவேளை, இறுதிகட்ட யுத்தத்தின் போது வன்னியில் இருந்து மீட்கப்பட்ட வாகனங்கள், வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினுள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் டெங்கு நுளம்பின் உற்பத்திக்கான வழிவகைகள் இருப்பதனால் அவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இச் செயற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன், சுகாதார வைத்திய அதிகாரி ப. சத்தியலிங்கம் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்றைய தினம் அரச திணைக்கள விடுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.