வவுனியா, அனுராதபுர மாவட்டங்களில் சிறுநீரக நோய் அதிகம் – ஹுனைஸ் பாரூக் எம்.பி.
மனித சமூகம் சுகதேகியாக வாழ வேண்டும் என்பதற்காக எமது அரசாங்கம் இலங்கையில் வரட்சி நிலவும் பிரதேசங்களில் மழை நீர் சேமிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமெரிக்க தூதரக பிரதி தூதுவர் வில்லியம் வெயின் ஸ்டெயின் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் ஆண்டியாப் புளியங்குளம் மஹா வித்தியாலயத்தில் 4 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் சேமிப்பு திட்டத்தை பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் ஜாபீர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதி தூதுவர் உரையாற்றுகையில் கூறியதாவது –
அமெரிக்க அரசாங்கத்தின் மூலம் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கு இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சுத்தமான குடிநீரை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. மனிதனுக்கு அத்தியவசியமானதான தண்ணீரை பெறுகின்ற போது அதன் தூய்மைத் தன்மை பேணப்பட வேண்டும். மழை நீரினை சேமித்து அதனை பயன்படுத்தும் இத்திட்டம் இப்பிரதேசத்திற்கு மிகவும் பொருத்தமானது.
குடிப்பதற்கு போன்று வீட்டுத் தோட்ட பயன்பாட்டுக்கும் இந்த நீரை பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் பேசும் போது –
குறிப்பாக அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களில் சுத்தமான நீரை பருகாததன் காரணமாக பலர் சிறுநீரக நோய்க்கு உள்ளாகியுள்ளதாக அறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது. அமெரிக்க தூதரகம், அரச சார்பற்ற அமைப்பின் மூலம் இப்பாடசாலைக்கு மழை நீர் சேமிப்பு திட்டமொன்றை நடை முறைப்படுத்தியிருப்பதை பாராட்ட வேண்டும்.
அதேபோல் எமது மக்களும் நோயற்றவர்களாக வாழ்வதற்கு சில நல்ல வழிகளை தெரிவு செய்ய வேண்டும். அதில் குடிநீர் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பது எனது ஆலோசனையாகும் என்றும் கூறினார்.