இந்திய வீடமைப்பு திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு- வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! (Photos)

வவுனியாவில் இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து வவுனியா மாவட்ட மீளக்குடியர்ந்தோர் நலன்பேணும் அமைப்பு நீதிமன்ற அனுமதியுடன் இன்று நண்பகல் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை வவுனியா நகரில் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு வவுனியா காவல்துறையினர் வவுனியா நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தை நடத்த இருந்தவர்களை அழைத்து பேசிய பின் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறும் அதற்கு காவல்துறையினர் பாதுகாப்பை வழங்குமாறும் வவுனியா நீதிபதி உத்தரவிட்டார். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த வவுனியா மாவட்ட மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த நீதிபதி ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையில் நடத்தி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நண்பகல் வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மக்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு வீடுவாசல்களை முற்றாக இழந்ததுடன் அகதி முகாம்களில் வாழ்ந்த பின்னர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் மண் குடிசைகளில் வாழ்ந்து வரும் நிலையில் இந்தியாவின் உதவியுடன் வழங்கப்படும் 50ஆயிரம் வீட்டு திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், முதலாம் இரண்டாம் கட்ட தெரிவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் சிபார்சு செய்த முஸ்லீம்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மீள்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட தாம் புறக்கணிக்கப்பட்டு வெளி இடங்களை சேர்ந்த முஸ்லீம்களுக்கு அங்கு காணியும் இந்திய அரசின் உதவியுடனான வீடுகளும் வழங்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை ஆட்சேபித்தே இன்று தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இனமத பேதமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வீட்டு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்றையும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஆர்ப்பாட்ட முடிவில் கையளித்தனர். தமிழர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஆதரவான முஸ்லீம்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த போதிலும் இன்று அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அனுமதி அளிப்பதாகவும் வவுனயா மாவட்ட நீதிபதி இன்று காலை உத்தரவிட்டிருந்தார்.




இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.