கிராமத்தை விட்டு வெளியேறும் மனநிலையுடன் வாழும் முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மக்கள்!
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதும், அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றிக் கொடுக்கப்படாத நிலையில், கிராமத்தை விட்டே வெளியேறும் மனோநிலையுடன் தாம் இருப்பதாக முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
2009ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கிராமத்தில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தபோதும் போக்குவரத்து, மருத்துவம், வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாற்றிடம் செல்ல வசதியற்ற 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இன்று கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும் 50 குடும்பங்கள் கூடாரங்களிலும், அரைநிரந்தர வீடுகளிலும் வாழ்கின்றனர்.
மேலும் சாதாரணமான சுகயீனத்திற்கு மருந்தெடுப்பதற்கும் கூட 18 கிலோ மீற்றர் பயணம் செய்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அல்லது அதேயளவு தூரம் பயணம் செய்து மல்லாவி வைத்தியசாலைக்கு மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது.
போக்குவரத்திற்காக கிராமத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தூரத்திலிருந்கும் ஏ-9 வீதிக்குச் சென்று அங்கிருந்தே பேருந்தினை எடுக்கவேண்டிய நிலையுள்ளது. யுத்தத்திற்கு முன்னர் இந்தக் கிராமத்திற்கூடாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தபோதும் யுத்ததின் பின்னர் அந்த நிலை மாற்றப்பட்டிருக்கின்றது.
இதேபோல் புத்துவெட்டுவான் கிராம பாடசாலையில் யுத்தத்திற்கு முன்னர் தரம் 9 வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டபோதும் தற்போது தரம் 5 வரையான வகுப்புக்களே இடம்பெற்று வருகின்றன.
தரம் 5 இற்கு மேல் கற்கும் மாணவ, மாணவியர் 8 கிலோ மீற்றர் காட்டுப்பகுதிக்கூடாக பயணம் செய்து ஜயங்கன் குளம் கிராமத்திற்குச் செல்கின்றனர். இந்நிலையில் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.