வீர பாண்டிய கட்டப்பொம்மன்..

இன்று தமிழர்கள் மறக்காத(கூடாத) ஒரு வீரமறவர்களுள் பசுமரத்தாணி போல் நம்முள் கலந்துவிட்ட வீரச்செம்மல்வேறு யாருமல்ல.. நாம் நன்கறிந்த-என் மனங்கவர்ந்த வீரன் வீர பாண்டிய கட்டப்பொம்மன்..தான் அந்த வீரன்..! இந்த பாருக்கு அவன் வந்த நாள் 3.01.1740 இல் ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு தம்பதியருக்கு, மகனாக பிறந்தான் இறும் தமிழ் தரணி போற்றும் வீரத்தமிழன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதர இருந்தனர். ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் கட்டபொம்மனுக்கு இருந்தனர். ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. இந்த அரச மரபில் 47வது மன்னனாக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 02.02.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரஜக்கம்மாள். இவர்களுக்கு ஆண்டவன் என்னவோ வாரிசாக வீரத்தமிழனை குலகொழ்ய்ந்தாக கொடுக்கவில்லை . ஆட்சிக் கட்டிலில் 09 ஆண்டுகள், 08 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கம்பெனியார் 1793 இல் கப்பம், வரி என்பன கேட்டனர். 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797-1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டு, போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார். நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.09.1798 இல் இராமநாதபுரத்தில் பேட்டி கண்டார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். வீரபாண்டியக் கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார். 05.09.1799 இல் பானர்மன் என்ற ஆங்கில தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. போரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். கோட்டையை விட்டு வெளியேறியது திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார் 09.09.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது. 01.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.