வவுனியா தமிழ்ப் பாடசாலையின் வகுப்பறையில் டெங்கு நுளம்புகள்; அழிக்கும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினர்!


வவுனியாவிலுள்ள பாடசாலையின் வகுப்பறைகளில் காணப்பட்ட டெங்கு நுளம்புகள் சுகாதாரப் பிரிவினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி வவுனியா தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறைகளில் டெங்கு நுளம்புகள் இருப்பதை அறிந்த சுகாதாரப் பிரிவினர் அங்கு சென்று அவற்றை அழிக்கும் பொருட்டு புகையூட்டலில் இறங்கினர். காலை 8.30 மணியளவில் பாடசாலை மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஒன்றரை மணித்தியாலங்களாக பாடசாலை வளாகம் முழுவதும் புகையூட்டப்பட்டது.
மேலும் அங்கிருந்த பற்றைகள், குப்பை கூளங்கள் என்பன மாணவர்களால் அப்புறப்படுத்தப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த சில மாதங்களாகத் தீவிரமடைந்ததால் சுகாதாரத் திணைக்களத்தினரும் நகரசபையினரும் டெங்கு எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி டெங்கு நோயினால் வவுனியா தேக்கவத்தை ஆலடிப் பகுதியைச் சேர்ந்த 3 வயதுச் சிறுமி உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கிராமங்கள், திணைக்களங்கள் பாடசாலை வளாகங்கள் ஆகிய இடங்களில் டெங்கு நுளம்பை ஒழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சீரற்ற வடிகால் அமைப்புகளில் நீர் தேங்கிக் காணப்படுவதால் டெங்கு நுளம்புகள் பெருகிக் காணப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வவுனியா நகரை அண்மித்தும் குளங்களை அண்மித்துள்ள கிராமப்புறங்களிலும் நீர் வழிந்து செல்லாத இடங்களிலும் டெங்கு நுளம்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு தேங்கியுள்ள நீர் அப்புறப்படுத்தப்படுமேயானால் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தணிக்க முடியுமென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.