கர்ப்பிணிகளை நேர காலத்துடன் வைத்தியசாலையில் அனுமதியுங்கள்! யாழ். பருத்தித்துறை வைத்தியசாலை அத்தியட்சகர்


யாழ். வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார் பிரசவ வலி தொடங்கும் வரை காத்திராமல் நேர காலத்துடன் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் தம்மை அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் த.விநோதன் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பிரதேசத்துக்கான பிரதான பாதையான பருத்தித்துறை வீதி மிக மோசமாகப் பழுதடைந்துள்ளது.
இதனால் மருதங்கேணி, அம்பன் அரசினர் கிராமிய வைத்தியசாலைகளில் பிரசவவலி தொடங்கிய பின்னர் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களை அம்புலன்ஸ்கள் மூலம் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்ற அதிக நேரம் தேவைப்படுகின்றது.
இந்த நிலையில் பிரசவங்கள் அம்புலன்ஸ்களிலேயே நிகழக் கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகத் தாய்க்கும், சேய்க்கும் பெரும் சிரமங்கள், கஷ்டங்கள் ஏற்படுவதுடன் உயிராபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகிவிடுகின்றன.
இந்தப் பிரதேச கர்ப்பிணித்தாய்மார்கள் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு பிரசவத்துக்கு உரிய காலம் வரும் வரை இருக்காது நேர காலத்துடன் வைத்தியசாலை விடுதிக்கு வந்து இணைந்து கொள்ள வேண்டும்.
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பாக நாகர்கோவில் தொடக்கம் கட்டைக்காடு வரையான மீள்குடியமர்வு இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.