டெங்குநோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்; வவுனியா மாவட்ட சுகாதார அதிகாரி கோரிக்கை


வவுனியாவில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியும் வவுனியா மாவட்ட தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரியுமான ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த வருடத்தில் 82 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகினர். இவர்களில் 72 பேருக்கு டெங்கு நோய் உறுதிசெய்யப்பட்டது. எனினும் உயிரிழப்புக்கள் இடம்பெறவில்லை.
ஆனால் இந்தவருடத்தின் ஆரம்பத்திலேயே 3 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். வவுனியாவில் தோணிக்கல்லை சேர்ந்த 3 வயது குழந்தையொன்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை டெங்கு நோயால் உயிரிழந்துள்ளது.
எனவே டெங்கு தாக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளமையால் பொதுமக்கள் நுளம்புபெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக நுளம்புகள் பெருகாதவாறு நீர் தேங்கி நிற்கும் இடங்களை முழுமையாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர் தேங்கி நிற்கும் பொருள்களை நிலத்தில் வெட்டி புதைத்தல் வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாகத் தகுதியான வைத்தியரையோ அல்லது வைத்தியசாலையையோ நாட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.