வவுனியாவில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு
வவுனியா, நாவற்குளம் பிரதேசத்தில் இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தின் பற்றைக் காட்டில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
பூநாவை பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வந்த குறித்த இராணுவ வீரர், கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இராணுவ வீரரின் தாயார் கடந்த 6ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் இந்நிலையிலே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.