நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்: வவுனியா நகரசபை உறுப்பினர் முனௌபர் குற்றச்சாட்டு
அண்மையில் பெய்த மழையால் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக வவுனியா நகரசபையின் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழு உறுப்பினருமான முனௌபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மழை வெள்ளத்தால் வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்கள் பாதிப்படைந்தன. ஒவ்வொரு கிராமமும் முற்றுமுழுதாக பாதிக்காவிட்டாலும் ஒரு சில கிராமங்களில் சில பகுதிகளும் இன்னும் சில கிராமங்கள் முழுமையாகவும் பாதிப்படைந்திருந்தன.
இம்மக்களுக்கு எவரும் நிவாரணங்களை வழங்க முன்வரவில்லை. கொழும்பிலும் பிற மாவட்டங்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனவந்தர்களும் வவுனியா மாவட்டத்திற்காக ஒப்படைத்த பொருட்களை உரியவர்கள் மக்களிடம் கொண்டு சென்று ஒப்படைக்கவில்லை.
எனினும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் நிவாரணங்களை அம்மக்களுக்கு வழங்கியிருந்தமையை வவுனியா மாவட்டத்திற்கு கிடைத்த சில நிவாரணப்பொருட்களையும் அரசியல் இலாபம் கருதி வேறு மாவட்டத்திற்கு வழங்கியதனால் வவுனியா மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.