ஆதவனைப் போற்றும் தைப் பொங்கல் நன்நாள்
தைப்பொங்கல் தமிழர் திருநாள். தை மாதத்தில் தான் பல விசேட கொண்டாட்டங்கள், வைபவங்களுடன், பல முதன்மை தரும் சமய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
எமது முன்னோர்கள் தங்கள் பண்பாட்டின் ஆணிவேராக இறைவன் மீதான நம்பிக்கையுடன் நன்றியுடமை, பணிவு சமூக நேயப் பாட்டினை ஆழமாகப் பதிந்து வைத்தார்கள்.
தைப்பொங்கல் எனும் எமது முக்கிய பண்டிகை ஒரு நாளுடன் தொடங்கி முடிவடைவதுமில்லை.
பொங்கலுக்கு முதல் நாளே வீட்டில் உள்ள பழைய பொருட்கள், வேண்டாத பண்டங்களை அகற்றி, வீட்டை லட்சுமிகரமாக்குவார். தை பொங்கலுக்கு முதல் நாளாகப் போகிப் பண்டிகையினை பழயன கழிதலும் புதிய புகுதலுமான புதிய நன்னாளாகப் பொங்கல் தினத்தை கொள்வர். இதன் பின்னரே தை மாதம் முதல் நாளாகப் பொங்கல் தினத்தை ஆரம்ப அதிஷ்ட நாளாக கொள்வது சந்தோஷகரமான மன நிறைவு அன்றோ!
மனித வாழ்விற்குத் தூய்மை மிகவும் அவசியமானது. அகம், புறம் சுத்தமாக அமைந்தால் மட்டுமே தனி மனித வழ்வு சுபீட்சம் நிறைந்ததாகக் கொள்ளப்படும்.
போகிப் பண்டிகையில் புறச் சூழல் தூய்மையாகின்றது. பொங்கல் திருநாளில் எம்மை என்றும் போஷிக்கும் இறைவனுக்கும், ஞாயிறுக்கும் வழிபாடுகளும், தித்திக்கும் பொங்கல் படைக்கப்படுகின்றன.
மேலும் தை மாதம் பிறக்கும் போது கோவில்களில் சங்கிராந்தித் தீர்த்தமும் நடைபெறுகின்றன. அந்த தினத்திலே பொங்கல் பொங்கப்படுகின்றன. இந்த பொங்கலைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதப் பிறப்பும் இவ்வண்ணம் மாதாந்தம் பொங்கல் பல கோவில்களில் நடைபெறுவதுண்டு.
வருட இறுதி மார்கழி மாதத்தில் இப் பொங்கல் வழிபாடுகளில் பிள்ளையாருக்கு மோதகம், பழங்கள், தித்திக்கும் பலகார வகைகளுடன் படையலிடப்படுகின்றன. இப் பொங்கல் மீண்டும் தைத்திருநாளில் ஆரம்பமாகி மாதா மாதம் பொங்கல் வைத்து இறைவனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மேலும் தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் பட்டிப் பொங்கல், ஆன்மீகப் பொங்கல், காணும் பொங்கல், ஆகியவைகளுடன் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவதும் தை மாதத்தில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒளியும், வெப்பமும், குளுமையும், இன்றேல் புவமை உயிர்பெறாது மானுட வாழ்வு மட்டுமல்ல, சகல ஜீவன்களுக்குமே இவற்றுடன் நீர், காற்று, மண், விண், உஷ்ணம் என்பவை சம்பந்தமானதே மனித உயிருடன் வாழ்க்கையாகும்.
எனவே இவைகளை எமக்கு அருளும் இறைவனை நாம் மறந்துவிடலாகாது.
வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையும் ஆய் இன்மையும் ஆய்க்
கோன் ஆகி யான் எனது என்று
அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே!
திருவாசகம் – திருச்சதகம்
விண், மண், காற்று, நெருப்பு, நீர் ஆகிய ஐம்பூதங்களும் நீயே. தோற்றத்தில் இருப்பவையும், தோன்றாத நிலையில் இருப்பவையும் நீயே. ஆன்மார்க்களுக்கு யான், எனது என்னும் ஜீவ வியக்தியைக் கொடுக்கின்றவனும் நீயே தான். இவை அனைத்திற்கும் கடவுளாய் இருப்பவனும் நீயே. இவை அனைத்தின் செயல்களை எல்லாம் உண்மையில் உன் செயல்களே தான். நின் மகிமையினை எப்படி எம்மால் விளக்க முடியும்? என்கின்றார் மணிக்கவாசகப் பெருமான்.
தனதுமேலான கட்டளையினால், படைப்பினால் பிரபஞ்சத்தைப் படைக்கின்றார். சூரியன், கிரகங்கள் அனைத்துமே இவன் ஆக்ஞையினால் நிகழ்கின்றன.
மறான் ப்ரபுர்வை புருஷ: ஸ தவஸ்யைஷ:
ஸ¤நிர்மலாமிமாம் ப்ராப்தி மீசானோ
ஜ்யோதிரவ்யய
- ஸ்வேதாச்வதரோப நிஷதம் 3 - 12
பரம புருஷனே தலைவனாகின்றான். அவன் நிச்சயமாகவே அனைத்தையும் அடக்கி ஆளுகின்ற அழிவற்ற (அந்தர் ஜோதியாம்) உன் ஒளியாய் இருக்கின்றான். நிர்மலமான இந்த நிலையை உயிர்கள் அடைதற் பொருட்டு அவைகளில் அறிவை அவள் முக்தி மார்க்கத்தில் நடத்துகின்றான்.
இறை வியாபகம், அதன் தன்மை, அவன் கருணை என்பனவற்றை நம்முடைய சிற்றறிவின் மூலம் உணர முடியாது. அவன் எல்லையற்ற பரம்பொருள். எமது அனைத்து விடயங்களையும் அவனே நடாத்துகின்றான். என்பதனை மேலான பக்திமூலம் உணர்வதே பேரானந்த நிலைக்கு எம்மை இட்டுச் செல்லும்.
எமக்கு ஆன்மீக விழிப்பூட்டல்களுக்காக எமது நாட்டின் ஆலயங்களில் கந்த புராண படனம் மூன்று மாதங்களுக்கு இடம்பெற்று வந்தன. தற்போதுபோதிய ஆன்மீக வள்ளல்கள், தமிழறிஞர்கள் குறைந்து அருகி வருவதனால் கந்த புராண படனம் சில ஆலயங்களில் நடைபெறுகின்றன. ஆனால் தலைநகர் கொழும்பில் பல ஆலயங்களில் புராணபடனம் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
இந்த நிகழ்ச்சி கூட தை மாதத்து வளர்பிறையில் ஆரம்பிக்கப்பட்டு கந்தபுராண படனம் பங்குனி மாதத்தில் நிறைவு பெறும். இதில் பங்குபெறும் சகல அடியார்களுக்கும் சிவாச்சாரியர் முறைப்படி சங்கல் செய்வார். மேலும் விநாயகர் வணக்கத்துடன் புராண பண்டிதர்கள் அறிஞர்கள் ஒருவர் பாட மற்றவர் அதற்கான விளக்கத்தை இலக்கண முறைப்படி சொல்லுவார். இவை நெஞ்சங்களைப் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தும்.
மேலும் கடைசி புராண படன நன்நாளில் கோவிலில் மிகச் சிறப்பாக விழா நடைபெறும். சுப்ரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்மன், வள்ளி அம்மனுடன் திருமண வைபவமும் நடைபெறும். புராண படனம் நடாத்தியோருக்கான கெளரவமும், தொடர்ந்து உற்சவத்தில் அடியார்களுக்கு திரு அமுது வழங்கப்படும்.
தை மாத சதுர்த்தியில் பிள்ளையார் வழிபாடு செய்தல் வேண்டும். தை மாதத்து முதல் செவ்வாய் கிழமை பைரவர் விரத நாள் ஆகும்.
மேலும் தை மாதத்தில் வரும் பிரதோஷ நாட்கள் பிரதானமானது ஆகும். இத்தினம் சிவன், அம்பாள், நந்தி ஈஸ்வர் ஆகியோர்களின் அருளைப் பெற்றுய்ய உகந்த நாட்கள்.
தேவர்களுக்குப் பகல் காலம் உத்தாராயணம் ஆகும். மகர ராசியில் சூரியன் புகும் காலம் உத்தராயண புண்ணிய காலமாகும்.
என சுப கருமங்கள் அனைத்தையும் இந்நாட்களில் செய்வர். தை மாதம் முதல் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயண காலமாகும்.
கோவில் கும்பாபிஷேகங்கள், திருமணங்கள் உபநயனம், வீடு கட்ட நாள் எடுத்தல் புதுமனை புகும் வைபவம் எல்லாம் உத்தராயண காலத்தில் தான் நடத்தப்படுகின்றன.
தை மாதம் பிறந்த வேளையில்தான் இச் சுப நாட்கள் தொடங்குவதால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என எம்முன்னோர்கள் செப்பினர். கால சூழ்நிலைகள், வெட்ப தட்ப நிலை, கிரக சஞ்சார அனுகூலங்களை வைத்தே சுபகாரியங்களை விஞ்ஞானக் கண் நோக்குடன் என்றோ எம் ஆன்மீக வள்ளல்கள் சாஸ்திர சம்பிரதாயங்களை உருவாக்கினர்.
ஒளிக் கடவுளை, இருள் அகற்றும் ஜோதிப் பிழம்பை நாம் என்றும் வணங்குவோம். அவன் அருளால் சூர்ய தேவன் எமக்கு அருள் கூர்கின்றார்.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே.
- திருவாசகம் சிவபுராணம்
குற்றம் இல்லாத விரிந்த மலர்ச் சுடரே, ஒளி வடிவானவனே. இனிமை நிறைந்த அமுதமே, மும்மலப்பற்றை அறுத்து என்னை வளர்க்கும் மேலோ என சிவனை இறைஞ்சுகின்றார் மாணிக்கவாசகர். இத் தைத்திருநாளை இறை ஒளியை அவன் திவ்ய நற்கருணையில் வியந்து போற்றுவோம். என்றும் ஒளி பெருகட்டும்.!