புனர்வாழ்வு பெற்ற 313 பேர் நேற்று சமூகத்துடன் இணைப்பு
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 313 பேர் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இவர்கள் விடுவிக்க ப்பட்டனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கந்தகாடு மற்றும் மருதமடு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற பயனாளிகளே நேற்று சமூகத்தில் இணைக்கப்பட்டனர். எஞ்சியவர்களையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் கடனுதவிகளை வழங்கி வருகிறது.
இவர்களுக்கான கடன்களை வழங்க அரசாங்கம் இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் 5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. கடந்த வருடம் 3 மில்லியன் ரூபாவாகவிருந்த இத்தொகை இம்முறை 5 மில்லியன்களாக ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
நேற்றைய நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், தென்மாகாண முதலமைச்சர் சான்லால் விஜயசிங்க, வன்னி கட்டளைத்தளபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முள்ளுக்கம்பிகளும், 5 தென்னங்கன்றுகளையும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று கையளிக்கவிருப்பதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கரைதுறைபற்று பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நஷ்ட ஈடுகளும், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கடன்களும் வழங்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
(News - THINAKARAN)
(News - THINAKARAN)