இது ஒரு வழக்கு எண் 18/9-ன் கதை..

``அப்பா நான் செத்துப்போறேன்ப்பா..” கீழ்பாக்கம் ஆதித்யா மருத்துவமனை அறை எண் 114-லிலிருந்து இப்படிதான் ஒலிக்கிறது அந்தக் குரல். அது வினோதினியின் குரல். வினோதினிக்கு தான் எவ்வளவு அழகான முகம். வண்ணத்துப் பூச்சியாகச் சிறகடித்துப் பறந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை ஒரே நாள் இரவில் கொடூரன் ஒருவனால் தலைகீழாகிப்போனது.

உடல் முழுக்கக் காட்டுப்போட்ட நிலையில் இருந்த வினோதினியால் பேச முடியவில்லை. மகளின் நிலையைப் பார்த்து அழுது அழுது கண்ணீர் வற்றிப்போய் நின்றிருந்த வினோதினியின் தந்தை ஜெயபாலனிடம் பேசினோம்.

``எனக்குப் பூர்வீகம் திருக்கடையூர். வினோதினி என்னோட ஒரே செல்லப் பொண்ணு. என் பொண்ணு படிப்புக்காகத்தான் காரைக்காலுக்கே வந்தோம். தனியார் ஸ்கூல்ல செக்யூரிட்டியா வேலை. அந்த வருமானத்துலதான் என் சக்திக்கு மீறி கடன் வாங்கி என் பொண்ண படிக்க வச்சேன். அவளும் என் நிலமை புரிஞ்சு நல்லா படிச்சு பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சா. எல்லாம் நல்லபடியாத்தான் போச்சு சார்.. திருவட்டக்குடி ஊர்கார சுரேஷ்ங்கிற அந்தப் பையன் எனக்கு அறிமுகமாகுறவரை. வேறொரு ஃப்ரெண்ட் மூலமா தான் எனக்கு அறிமுகமானான். ஆரம்பத்துல நல்லாத்தான் பழகுனான்.

ஆனா போகப்போகத்தான் அவன் தப்பான நோக்கத்துல தான் எனக்கு அறிமுகமாகியிருக்கான்னு தெரிஞ்சது. என் பொண்ண விரும்புறதா தெரிஞ்சவங்கக்கிட்ட பொய்யா தகவல் பரப்பிருக்கான். இது என் பொண்ணுக்கு தெரிஞ்சதும் என்னைச் சத்தம் போட்டா. நானும் அவனைக் கூப்பிட்டு, என் வீட்டுப்பக்கம் வராதேனு கண்டிச்சேன். ஆனாலும் அவன் தொடர்ந்து தொந்தரவு பண்ணதால போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்களும் அவனைக் கூப்பிட்டு கண்டிச்சாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் பிரச்னை இல்லாம இருந்தது. என் பொண்ணுக்கும் தனியார் கம்பெனில வேலைக்கிடைச்சு சென்னைக்குப் போய்ட்டதால நிம்மதியா இருந்தோம். ஆனா அவன் வன்மத்தோட இருந்துருக்கான்னு அப்போ தெரியல.

தீபாவளி லீவுக்கு ஊருக்கு வந்துட்டு மறுநாள் சென்னைக்குக் கிளம்பினாள். பஸ் ஏத்திவிட நானும் கூடப் போனேன். திடீர்னு வழிமறிச்சு `எனக்கு கிடைக்காத இந்த முகம்.. யாருக்கும் கிடைக்கக்கூடாதுனு’ சொல்லிட்டே என் பொண்ணு முகத்துல ஆசிட் வீசிட்டான்யா அந்தக் கொடூரன்..” என்று சொல்லும்போதே அந்தத் தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்து பேசமுடியாமல் திணறுகிறார்.

சிறிது இடைவெளிவிட்டு ``கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததுனே தெரியலங்கையா. என் பொண்ணு வலி தாங்க முடியாம கீழ விழுந்து புரளவும் அவளை மடில தூக்கி வச்சேன். அப்போ அவ உடம்புல பட்டு வடிஞ்ச ஆசிட் எம்மேலயும் பட்டு எனக்குக் கைலயும் நெஞ்சுலயும் வெந்துப்போச்சு. என்னாலயே அதைத் தாங்க முடியல.. ஐயோ என் புள்ள எப்படியெல்லாம் துடிச்சா தெரியுமாங்கைய்யா.. ஆசிட் பட்டதால ரெண்டு கண்லயும் பார்வைப் போயிருச்சுனு சொல்றாங்க.. இப்போ வலி தாங்க முடியாம.. `அப்பா இந்த முகம் வேணாம்.. நான் செத்துப்போறேன்.. கொன்னுடுங்கப்பா’னு கதறி அழுறா.

`அப்பா.. இனி நீங்க செக்யூரிட்டி வேலைக்குப் போக வேணாம்ப்பா.. நான் சம்பாதிக்குறேன்.. சென்னைக்கு வந்துருங்க.. நான் உங்களைப் பார்த்துக்குவேன்ப்பா’னு என் பொண்ணு கடைசியா என்கிட்ட சந்தோசமா பேசுன வார்த்தை இதுதாங்க.. ஆனா என் புள்ள கனவு எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டான்யா அந்தப்பாவி. சிகிச்சையளிக்கக்கூடப் பணம் இல்லாம இருக்குற நான் இனி என் புள்ளைய எப்படிக் காப்பாத்துவேனு தெரியலையே” என்று கையறு நிலையில் நிற்கும் தந்தையாகக் கதறி அழுகிறார் ஜெயபாலன்.

இறுதியாக அங்கிருந்து கிளம்பிய நம்மிடம், ``எனக்கு ஏற்பட்ட இந்த நிலமை வேற எந்தப் பொண்ணுக்கும் ஏற்படக்கூடாது சார்.. அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்.. ஆதுக்காகவாவது நான் உயிர் வாழணும்னு இப்போ ஆசைப்படுறேன் சார்” என்று உறுதியாக ஒலிக்கிறது வினோதினியின் குரல். ஒருதலைக்காதலின் பெயரால் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசும் சுரேஷ்கள் திருந்தினால் மட்டுமே இந்த `இந்த வழக்கு எண்’ முடிவுக்கு வரும்.

---------------------------------------------------------------------------------------------------

ஆசிட் வீசப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வினோதினிக்கு சிகிச்சையளிக்கும் கேம்.எம்.சி.யின் ஓய்வுப்பெற்ற தலைமை மருத்துவர் ஜெயராமனிடம் பேசினோம். ஆசிட் சாதாரணமாக எல்லா ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கிறது. அதைத் தான் இப்படிப் பயன்படுத்துகிறார்கள். ஆசிட் மேலேப்பட்டதும் மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது அந்த இடத்தில் பாலை ஊற்ற வேண்டும் என்பது தான். அதன் பிறகு தீக்காயங்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளுக்கு அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆசிட் பட்ட இடங்களை முற்றிலும் நீக்கியே ஆக வேண்டும். அதன்பிறகே உடலின் மற்றப் பாகங்களில் இருந்து தோலை எடுத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பொருத்தி சரி செய்ய முடியும். அதுவும் முழுமையாகப் பழைய நிலை வராது. ஓரளவுக்குத் தான் சரி பண்ண முடியும் என்றார்.

ஆண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
-----------------------------------------------------------
டாக்டர்.ருத்ரன்
மனநல மருத்துவர்

தனக்குக் கிடைக்காத அந்தப் பெண்ணின் அழகு வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வக்கிரமன நிலையிலிருந்து செயல்பட்டிருக்கலாம். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மனநோயாளிகள் என்று குறிப்பிட முடியாது. இது ஒருவகையான பொறுக்கித்தனமான செயல்பாடு. பெண்கள் மீது ஆசிட் வீசும் விசயம் என்றில்லை, இவர்கள் எல்லா விசயங்களிலும் சமூகத்திற்கு எதிராகத்தாகத்தான் இருப்பார்கள். அதுப்பற்றி அவர்களுக்குக் குறைந்தபட்ச வருத்தம் கூட இருக்காது. பிறப்பிலிருந்து வரும் வக்கிரமான இந்தக் குணத்தைத் திருத்தவும் முடியாது. சிறுவயதிலேயே இதைக் கண்டுபிடித்துத் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப் படுவாய் என்று எச்சரிக்கலாம்.

-ஞானபாலா
படங்கள்: ம.செந்தில்நாதன்

நன்றி: THAMIZHACHI

--------------------------------------------------------------
வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் வினோதினியின் சிகிச்சைக்கான பண உதவி பெற உதவும் வகையில் இந்த இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்.. அவருக்கு நன்றி
http://www.helpvinodhini.com/

JAYAPALAN
603899558
INDIAN BANK
KILPAK BRANCH
IFCS CODE: IDIB000k037
contact : ramesh 9944161416

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.