தொடர்ந்தும் சீரற்ற காலநிலை
வவுனியாவில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவுவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்மஸ் ஆராதனை நிகழ்வு நடைபெற்றபோது ஓய்ந்திருந்த மழை நேற்றுக் காலை முதல் பெய்து கொண்டிருந்தது. இதனால் இடம்பெயர்ந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து வெளியிடங்களுக்கு குறிப்பாக மன்னார் பிரதேசத்திற்கு செல்லும் வீதிகள் யாவும் வெள்ளம் பாய்வதால் பேருந்து போக்குவரத்துக்கள் யாவும் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக வவுனியாவில் உள்ள அரசாங்க அதிகாரிகளின் லீவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் நேற்று அடைமழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முத்தையன் கட்டு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டு, விசுவமடு, பழைய முறிகண்டி, ஐயங்கன்குளம் மற்றும் கல்மடு ஆகிய குளங்களும் வான் பாய்வதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
|
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்திற்கு நாலா பக்கங்களினாலும் மழைவெள்ளம் பாய்ந்து வந்து கொண்டிருப்பதனால் குளத்தின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்துள்ளதனால் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பன்னங்கண்டி மற்றும் மருதநகர் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கடும் குளிரான காலநிலை நிலவுவதனாலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நத்தார் தினக் கொண்டாட்டங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்திலும் கடும் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள 26 சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் மேலும் 86 குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வடமத்திய மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
|