வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நட்டஈடுகளை வழங்கும்!- அமைச்சர் மகிந்த அமரவீர
அசாதாரண காலநிலை காரணமாக இடம்பெற்ற பாதிப்புகள் குறித்த அறிக்கை எதிர்வரும் வாரம் கூடவுள்ள அமைசரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், விளைச்சல் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும் நட்டஈடுகளை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தில், அசாதாரண காலநிலை காரணமாக 9 , 717 குடும்பங்களைச் சேர்ந்த 33 ,859 பேர் 195 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை பெற்றுக்கொடுப்பதற்கு மேலும் 100 மில்லியன் ரூபா நாளை வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கான உணவுப் பொருட்கள் பத்து லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே இந்த உணவுத் தொகுதி அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் அந்தந்த மாவட்டங்களின் வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மன்னார், நானாட்டான், முசலி, மடு மற்றும் மாந்தை பிரதேச செயலக பிரிவுகள் என்பன மிகவும் பாரதூரமாக பாதிப்படைந்தன.
இதனால் 4, 225 குடும்பங்களைச் சேர்ந்த 17, 339 பேர் பாதிக்கப்பட்டதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எ.சி.எம்.ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 1, 307 குடும்பங்கள் இன்னும் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டன.