கிளிநொச்சியில் இயற்கையின் சீற்றம்: ஏழாயிரம் குடும்பங்கள் பாதிப்பு! பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயினை நாகம்மாள் ஆலயம் உதவி
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழையினால் சுமார் ஆறாயிரத்து 900 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 27 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகத்தின் தரவுகள் தெரிவித்திருக்கின்றன.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையினாலும், மாவட்டத்திலுள்ள பெரியகுளங்களிற்கு நீர்வரத்து அதிகரித்தமையினாலும் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 15 நலன்புரி நிலையங்களும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 10 நலன்புரி நிலையங்களும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இரு நலன்புரி நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் சுமார் 1522 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 378 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக நேற்று மாலை கிடைத்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கும் மேலதிகமாக இரண்டாயிரத்து 342 குடும்பங்களைச் சோந்த எட்டாயிரத்து 842 பேர் வெள்ளப்பாதிப்பிற்குள்ளான நிலையில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு மாவட்டச் செயலகத்தினால் அவசர உதவிகளும், சமைத்த உணவும் வழங்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றயதினம் மழை பெரியளவில் பெய்திருக்கவில்லை. எனினும் இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து தொடர்ந்தும் அதிகளவில் இருப்பதாகவும், குளத்தின் நீர்மட்டம் குறைவடையாத நிலையில் அதிகளவு நீர் வான் வழியாக தொடர்ந்தும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனொரு கட்டமாக கிளிநொச்சி, அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களுக்கு கனடிய நயினை நாகம்மாள் ஆலய சபை பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளிற்கேற்ப உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த உதவிகளை அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சர்வா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் மா.சுகந்தன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் சிவகுமார் ஆகியோர் நேரடியாக மக்களிடம் கையளித்தனர்.