கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளை அரசாங்கம் புறக்கணித்தாலும் பாரிய அபிவிருத்திகளை செய்துள்ளோம்: எம். எம். ரதன்


இலங்கையில் காணப்படுகின்ற உள்ளுராட்சி மன்றங்களின் த.தே.கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் திட்டமிட்ட ரீதியில் புறக்கணிக்கப்பட்டாலும், மக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம். எம். ரதன் தெரிவித்தார்.
வவுனியாவின் பொது அமைப்புகள் நகரசபை தொடர்பாக அனுப்பிய ஏழு கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றைய தினம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற போது அதற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே நகரசபையின் பதில் தலைவர் எம். எம். ரதன் இதனை தெரிவித்தார்.
வவுனியா பொது மக்களின் கோரிக்கைகளின் முதலாவதாக குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பானது, வைரவ புளியங்குளம் 3ம் ஒழுங்கை குப்பைகள் எடுப்பதற்கு எமது ஊழியர்கள் சென்றபோது சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ள வீடுகள் சில பூட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. அது போன்று பத்தினியார் மகிழங்குளம் பகுதிக்கு மாதத்துக்கு இரண்டு தடவை மட்டுமே சுகாதார ஊழியர்கள் சென்று அதனை அகற்றி வருவதாக குறிப்பிட்டார்.
இரண்டாவதாக பல லட்சம் ருபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பூந்தோட்டம் எரிவாயுவில் உடல் தகனம் செய்யும் நிலையம் பாவனைக்குட்படுத்தப்படாமை. காரணம் உடல் எரிக்கும் ஊழியர்கள் எமது மாவட்டத்தில் இல்லாதமை கொழும்பில் உள்ள இரண்டு மலர்ச்சாலைகளுடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான கோரிக்கைகளை விடுத்தோம் அது பயனளிக்காத நிலையில் இம் மயானத்தை பூந்தோட்டம் இந்து மயான சங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளோம்.
மூன்றாவது விடயம் நகரசபையின் நிதியிலிருந்து 25லட்சம் ரூபா நிதியினை உறுப்பினர்கள் கையாடிய விடயம் தொடர்பானது, அதற்கு நகரசபையின் பதில் தலைவர் பதிலளித்தபோது, இலங்கையில் உள்ளூராட்சி சபை கட்டளை சட்டத்தின் பிரகாரம் நகரசபை பிரதேசசபை உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது கிடையாது.
பாராளுமன்ற மாகானசபை மற்றும் மாநகரசபை உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்துவது போல் நகரசபை உறுப்பினர்கள் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. எமது சபையில் 25 லட்சம் ரூபா நிதி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக சபையில் எந்த கூட்டத்திலும் இவ்வாறான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
நான்காவது விடயம், இந்திய அரசாங்கத்தால் வளங்கப்பட்ட ஐந்து பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமை தொடர்பானது, எமது சபைக்கு சொந்தமான 5 பஸ்களில் எமது நடமாடும் சேவைக்காக 1 பஸ் சேவையில் அமர்த்தப்பட்டமையும் வவுனியாவில் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கோயில்கள் என பல சேவைகளுக்காக நாளாந்தம் எமது பேருந்திலேயே தூர இடங்களுக்கு செல்கின்ற போது எடுத்து செல்கின்றனர். மேற்குறிப்பிடப்பட்டவர்களின் தேவைகளுக்கு பேருந்தினை பயன்படுத்தல் தேவை இல்லையா என பொது அமைப்புக்களிடம் உப தலைவர் கேட்டபோது அது சரியானதோ என அவர்களின் பிரதநிதிகள் பதில் அளித்தனர்.
ஜந்தாவது விடயம், கடை பெயர் மாற்றம் தொடர்பானது, எமது சபையானது இரண்டு தடவை இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஒழுங்கின் பிரகாரம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தோம். இது தொடர்பாக கடந்த மாதம் வடமாகான உள்ளூராட்சி ஆணையாளரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். ஜனவரி மாத நடுப்பகுதியில் இதற்கான முடிவை அறிவிப்பதாக எம்மிடம் தெரிவித்தார்.
ஆறாவது விடயம், வீதிகள் திருத்தப்படாதமை வவுனியா நகரசைபக்குட்பட்ட காணப்படுகின்ற 21 வீதிகளை காபட் வீதியாக செப்பனிட்டு தருவதாக கெயார் நிறுவனம் எமக்கு 2011ம் ஆண்டு உறுதியளித்தது. அதற்கென பல மில்லியன் பணத்தினை ஒதுக்கீடு செய்தனர். ஆயினும் அரசாங்கத்தினால் திட்டமிட்ட ரீதியல் அப்பணம் வெலி ஓயா சிங்கள பகுதிக்கு மாற்றப்பட்டதால் எமது வீதி வேகைள் நிறுத்தப்பட்டது.
ஆயினும் எமது சபையின் முயற்சியால் அம் நிதி மீண்டும் எமக்கு இந்த ஆண்டு கிடைக்கப்பெற்றது. இதன் பிரகாரம் 1.11.2012 கெயார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் பிரகாரம் அவ் வீதிகளை ஒப்படைத்துள்ளோம். 2013 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வேலைகளை முடித்து தருமாறு கூறியுள்ளார். இவற்றுடன் 42 கடிதங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.
இந்த அடிப்படையில் பொது அமைப்புகள் எமது சபைக்கு பக்க பலமாக இருந்து எமது நகர அபிவிருத்திக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும். அதனை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.